தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய விளையாட்டு: இந்தியா-ஜப்பான் மோதல்

ஆசிய விளையாட்டு: இந்தியா-ஜப்பான் மோதல்

ஆசிய விளையாட்டு: இந்தியா-ஜப்பான் மோதல்


ADDED : செப் 17, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 11:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஜப்பானில் ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. இதன் பெண்கள் கிரிக்கெட் 4வது காலிறுதியில் (செப். 18) இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன. சமீபத்தில் 8வது முறையாக ஆசிய கோப்பை கைப்பற்றிய ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு, துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஸ்ரீசரணி உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில், ஆசிய விளையாட்டில் தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வெல்லலாம்.

சொந்த மண்ணில் களமிறங்கும் ஜப்பான் அணி, பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்த முழுத்திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

மற்றொரு காலிறுதியில் இலங்கை, மலேசியா அணிகள் விளையாடுகின்றன.

அரையிறுதியில் வங்கதேசம்

பெண்கள் கிரிக்கெட் காலிறுதியில் நேற்று வங்கதேசம், சீனா அணிகள் மோத இருந்தன. ஆனால் கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால், 'டாஸ்' கூட போடாத நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டது. ஐ.சி.சி., தரவரிசையில் சீனாவை (36வது இடம்) முந்திய உலகின் 'நம்பர்-10' வங்கதேச அணி, நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

* மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி (92/7, 10.4 ஓவர்) 3 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்து அணியை (91/4, 11 ஓவர்) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்திய ஜோடி ஏமாற்றம்

ஆண்கள் இரட்டையர் 'டெக்பால்' 'பி' பிரிவு லீக் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் டெக்லான் மார்ஷல் கான்சால்வ்ஸ், முகமது அனாஸ் இம்ரான் பெக் ஜோடி 0-2 (10-12, 8-12) என, வியட்நாமின் ட்ரூங் ஜியாங் பா, அன் கோவா லே ஜோடியிடம் தோல்வியடைந்தது. மீண்டும் ஏமாற்றிய இந்திய ஜோடி 2வது போட்டியில் 0-2 (4-12, 7-12) என, தென் கொரியாவின் ஜுன்சுக் லீ, டேபின் லீ ஜோடியிடம் வீழ்ந்தது. இதனையடுத்து பதக்கப்போட்டிக்கு தகுதி பெறத்தவறியது.

'டெக்பால்' எப்படி

ஆசிய விளையாட்டில் இம்முறை 'டெக்பால்' போட்டி அறிமுகமானது. வீரர்கள் தங்களது கைகளை தவிர உடலின் மற்ற அனைத்து பாகங்களை பயன்படுத்தி, ஒரு வளைந்த மேசையின் மீது சிறிய அளவு கால்பந்தை மாறி, மாறி அடித்து டேபிள் டென்னிஸ் போல விளையாடுவர்.

'டெக்பால்' போட்டி 2014ல் ஹங்கேரியில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2017ல் முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. கடந்த 2018 ல் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இப்போட்டி, ஆசிய பீச் விளையாட்டு (2021), ஐரோப்பிய விளையாட்டில் (2023) இடம் பெற்றது. இப்போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

வாலிபால்: காலிறுதியில் கஜகஸ்தான்

பெண்களுக்கான வாலிபால் 'பி' பிரிவு லீக் போட்டியில் கஜகஸ்தான் அணி 3-1 என, பிலிப்பைன்சை வீழ்த்தியது. ஏற்கனவே சீனாவிடம் தோல்வியடைந்த பிலிப்பைன்ஸ் அணி 'நாக்-அவுட்' சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. 'பி' பிரிவில் சீனா, கஜகஸ்தான் அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தன.

'சி' பிரிவு லீக் போட்டியில் சீனதைபே அணி 3-0 என, மங்கோலியாவை வீழ்த்தி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்து காலிறுதிக்கு முன்னேறியது. 'டி' பிரிவு லீக் போட்டியில் தென் கொரிய அணி 3-0 என, கத்தாரை வென்றது. ஏற்கனவே ஹாங்காங்கை வீழ்த்திய தென் கொரியா காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது.

கால்பந்து: தென் கொரியா கலக்கல்

பெண்கள் கால்பந்து 'எப்' பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், தென் கொரியா அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த தென் கொரியா 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே மியான்மரை வென்ற தென் கொரியா, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்து 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.

'இ' பிரிவு லீக் போட்டியில் சீனதைபே அணி 1-0 என, தாய்லாந்தை வென்றது. சீனா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதிய 'ஜி' பிரிவு லீக் போட்டி 1-1 என, 'டிரா' ஆனது.

கூடைப்பந்து: பிலிப்பைன்ஸ் பிரமாதம்

பெண்கள் கூடைப்பந்து 'பி' பிரிவு லீக் போட்டியில் பிலிப்பைன்ஸ் அணி 86-58 என, கஜகஸ்தானை வீழ்த்தியது. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தோனேஷிய அணி 61-52 என, தாய்லாந்தை வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us