ADDED : செப் 17, 2026 10:57 PM

சமர்கண்ட்: செஸ் ஒலிம்பியாட் 2வது சுற்றில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் வெற்றி பெற்றன.
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில், செஸ் ஒலிம்பியாட் 46வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவில் 208, பெண்கள் பிரிவில் 192 என மொத்தம் 400 அணிகள் பங்கேற்கின்றன.
ஓபன் பிரிவு 2வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, இந்தோனேஷியாவை சந்தித்தது. இந்தியாவின் நிஹால் சரின் (வெள்ளை), 37வது நகர்த்தலில் இந்தோனேஷியாவின் ஆரிப் அப்துல் ஹபிசை (கருப்பு) வீழ்த்தினார். மற்ற இந்திய வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜ்ராத்தி, தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர்.
முடிவில் இந்திய அணி 2.5 - 1.5 என்ற கணக்கில் தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே முதல் போட்டியில் தாய்லாந்தை வென்றது.
வைஷாலி 'டிரா': பெண்கள் பிரிவு 2வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, பின்லாந்தை எதிர்கொண்டது. இந்தியாவின் திவ்யா (வெள்ளை), 38வது நகர்த்தலில் பின்லாந்தின் ஜோஹன்னாவை (கருப்பு) வீழ்த்தினார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ வெற்றி பெற்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை வைஷாலி (கருப்பு), அனஸ்டாசியா கெய்னானெனுக்கு (வெள்ளை) எதிரான போட்டியை 88வது நிமிடத்தில் 'டிரா' செய்தார்.
முடிவில் இந்திய அணி 3.5 - 0.5 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பெற்றது. ஏற்கனவே முதல் போட்டியில் டொமினிகன் குடியரசு அணியை வீழ்த்தியது.
