ADDED : செப் 16, 2026 09:37 PM

சமர்கண்ட்: செஸ் ஒலிம்பியாட் தொடரை இந்திய அணிகள் வெற்றியுடன் துவக்கின.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 46வது சீசன் நேற்று உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் துவங்கியது. ஓபன் பிரிவில் 208, பெண்கள் பிரிவில் 192 என மொத்தம் 400 அணிகள் பங்கேற்கின்றன.
ஓபன் பிரிவில் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்திய அணி, தனது முதல் போட்டியில் தாய்லாந்தை சந்தித்தது. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய நிஹால் சரின், 28 வது நகர்த்தலில் தனடோனை சாய்த்து, இந்தியாவுக்கு முதல் வெற்றி பெற்றுத் தந்தார்.
உலக சாம்பியன் குகேஷ், பரிஷ் ரஷித்தை வீழ்த்தினார். விதித் குஜ்ராத்தி, டுபாவை வென்றார். மற்றொரு போட்டியில் அர்ஜுன் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இந்திய அணி 3.0-1.0 என வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவில் 'நம்பர்-1' அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் போட்டியில் டொமினிகன் குடியரசு அணியை சந்தித்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய வைஷாலி, ஹம்பி, சவிதா ஸ்ரீ, வந்திகா என நான்கு பேரும் வெற்றி பெற்றனர். முடிவில் இந்திய அணி 4.0-0 என வெற்றி பெற்றது.
