/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய ஹேண்ட்பால்: சாதிக்குமா இந்தியா
/
ஆசிய ஹேண்ட்பால்: சாதிக்குமா இந்தியா
ADDED : டிச 02, 2024 11:03 PM

புதுடில்லி: ஆசிய ஹேண்ட்பால் லீக் போட்டியில் இன்று இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
டில்லியில், பெண்களுக்கான ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 20வது சீசன் இன்று துவங்குகிறது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 8 அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (டிச. 8) முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிகள், வரும் டிச. 10ல் நடக்கும் பைனலில் விளையாடும்.
'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இன்று ஹாங்காங் அணியை சந்திக்கிறது. அதன்பின் ஈரான் (டிச. 4), ஜப்பான் (டிச. 6) அணிகளை எதிர்கொள்கிறது. 'ஏ' பிரிவில் கஜகஸ்தான், சீனா, தென் கொரியா, சிங்கப்பூர் அணிகள் உள்ளன.
எட்டாவது முறை: இத்தொடரில் இந்திய அணி 8வது முறையாக (1993, 2000, 2008, 2012, 2015, 2018, 2022, 2024) பங்கேற்கிறது.
பயிற்சியாளர் நம்பிக்கை: இந்திய அணியில் மெனிகா, பாவனா சர்மா, பிரியங்கா தாகூர், மணிகா பால், நினா ஷில் என திறமையான வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இத்தொடருக்காக இந்திய வீராங்கனைகள் சமீபத்தில் குஜராத்தில் பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் சச்சின் சவுத்தரி கூறுகையில், ''இத்தொடரில் சாதிக்க இந்திய வீராங்கனைகள் சிறப்பான முறையில் தயாராகி உள்ளனர். சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாட இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தொடர் நமது வீராங்கனைகளுக்கு சிறந்த அனுபவம் கொடுக்கும்,'' என்றார்.