வரலாறு படைத்தது இந்தியா: ஆசிய 'ரிகர்வ்' வில்வித்தையில்...
வரலாறு படைத்தது இந்தியா: ஆசிய 'ரிகர்வ்' வில்வித்தையில்...
ADDED : அக் 02, 2026 11:09 PM

அய்ச்சி: ஆசிய விளையாட்டு வில்வித்தையில் நேற்று 'ரிகர்வ்' பிரிவில் போட்டிகள் நடந்தன. இந்தியாவின் அன்கிதா, கும்கும், கீர்த்தி இடம் பெற்ற அணி, அரையிறுதியில் சீனாவை எதிர்கொண்டது. இதில் 5-1 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் வலிமையான தென் கொரியாவை சந்தித்தது.
முதல் இரு செட் சமன் (54-54, 56-56) ஆக, ஸ்கோர் 2-2 என இருந்தது. மூன்றாவது செட்டை இந்தியா 55-51 என வசப்படுத்த, 4-2 என முந்தியது. கடைசி செட் மீண்டும் சமன் (54-54) ஆனது. இருப்பினும் இந்திய பெண்கள் அணி 5-3 என வெற்றி பெற்றது. 'ரிகர்வ்' பிரிவில் முதன் முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்தியா. முன்னதாக 2023ல் இந்தியா, வெண்கலம் வென்றிருந்தது.
கலப்பு அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியாவின் கும்கும், திராஜ் பொம்மதேவரா இடம் பெற்ற அணி, 5-3 என ஜப்பாவை வீழ்த்தியது. அடுத்து பைனலில் இந்தியா, சீனா மோதின. முதல் மூன்று செட் முடிவில் இந்தியா 2-4 என பின்தங்கியது. கடைசி செட் சமன் ஆக, இந்தியா 3-5 என தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.
ஆண்கள் அணிகளுக்கான அரையிறுதியில் திராஜ், யாஷ்தீப் சஞ்சய், நீரஜ் இடம் பெற்ற இந்திய அணி, 6-0 என ஈரானை வீழ்த்தியது. அடுத்து பைனலில் இந்திய அணி 1-5 என தென் கொரியாவிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
