தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஒரே நாளில் இந்தியா நான்கு தங்கம்: ஆசிய விளையாட்டு வில்வித்தையில் அபாரம்

ஒரே நாளில் இந்தியா நான்கு தங்கம்: ஆசிய விளையாட்டு வில்வித்தையில் அபாரம்

ஒரே நாளில் இந்தியா நான்கு தங்கம்: ஆசிய விளையாட்டு வில்வித்தையில் அபாரம்


ADDED : செப் 30, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 11:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அய்ச்சி: ஆசிய விளையாட்டில் நேற்று ஒரே நாளில் இந்தியா, நான்கு தங்கப்பதக்கம் கைப்பற்றியது. வில்வித்தையில் இந்தியா 'ஹாட்ரிக்' தங்கம் வசப்படுத்தியது.

ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. நேற்று வில்வித்தையில் காம்பவுண்டு பிரிவில் போட்டிகள் நடந்தன. இதன் அரையிறுதியில் ஜோதி, சிகிதா, பிரித்திகா இடம் பெற்ற இந்திய அணி, வலிமையான தென் கொரியாவை எதிர்கொண்டது. இதில் 234-233 என 'திரில்' வெற்றி பெற்றது.

அடுத்து நடந்த பைனலில் இந்தியா, சீன அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 238-234 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றியது.

'கலப்பில்' கலக்கல்

காம்பவுண்டு, கலப்பு அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாஹில், சிகிதா ஜோடி, தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 156-155 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து நடந்த பைனலில் இந்திய ஜோடி, வலிமையான தென் கொரியாவை சந்தித்தது. முதல் இரு செட் முடிவில் இந்தியா 80-78 என முன்னிலையில் இருந்தது. கடைசி இரு செட்டில் இலக்கு தவற, 77-79 என இந்தியா பின்தங்கியது. முடிவில் போட்டி 157-157 சமன் ஆனது.

வெற்றியாளரை முடிவு செய்ய 'ஷூட் ஆப்' நடந்தது. இந்தியாவின் சாஹில், சிகிதா 10, 10 என இலக்கை துல்லியமாக தாக்கியது. மறுபக்கம் தென் கொரியா 10, 9 என ஏமாற்றியது. முடிவில் இந்திய ஜோடி 158-157 என 'திரில்' வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றியது.

ஆண்கள் அசத்தல்

ஆண்கள் அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியா சார்பில் குஷால் தலால், சாஹில் ராஜேஷ், கணேஷ் மணிரத்னம் திருமுரு இடம் பெற்ற அணி, தென் கொரியாவை சந்தித்தது. இதில் இந்திய அணி 236-229 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. அடுத்து நடந்த பைனலில் இந்தியா, சீனா பலப்பரீட்சை நடத்தின.

முதல் செட்டில் இந்தியா 58-60 என பின்தங்கியது. அடுத்த இரு செட்டில் சிறப்பாக செயல்பட்டாலும் 178-179 என பின்தங்கியது இந்தியா. கடைசி செட்டில் (6 வாய்ப்பு) இந்தியா 60-58 என அசத்தியது. முடிவில் இந்தியா 238-237 என 'திரில்' வெற்றி பெற்று, தங்கம் தட்டிச் சென்றது.

மீண்டும் 'ஹாட்ரிக்'

கடந்த 2023 ஆசிய விளையாட்டு வில்வித்தை, காம்பவுண்டு பிரிவில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள், கலப்பு என மூன்று அணிகளும் தங்கம் வென்றன. தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் இந்தியா, மூன்று தங்கம் வசப்படுத்தியது.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சாஹில், சிகிதா ஜோடி தங்கம் வென்றதை அடுத்து, வரும் 2028ல் நடக்க உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றது.



துப்பாக்கிசுடுதலில் இந்தியா அசத்தல்

துப்பாக்கிசுடுதலில் நேற்று கலப்பு அணிகளுக்கான 'டிராப்' போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் கினன் செனாய், தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற நீரு தண்டா களமிறங்கினர். இரண்டு சுற்று முடிவில் இந்திய அணி, 136 புள்ளியுடன் நான்காவது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறியது. அடுத்து நடந்த பைனலில் அசத்திய இந்திய ஜோடி 34 புள்ளியுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றியது. தவிர, இது புதிய ஆசிய சாதனை ஆனது.

கத்தார் (32), சீனா (23) அணிகள் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றன.

மல்யுத்தம்: சுனில் 'வெண்கலம்'

ஆசிய விளையாட்டில் நேற்று மல்யுத்த போட்டிகள் துவங்கின. ஆண்களுக்கான 'கிரிகோ ரோமன்' பிரிவில் இந்தியாவின் சுனில் குமார் (87 கிலோ) பங்கேற்றார். காலிறுதியில் 9-0 என தஜிகிஸ்தான் வீரர் முகமதுவை வென்றார்.

அடுத்து நடந்த அரையிறுதியில் 0-11 என ஜப்பானின் யோஷிதாவிடம் தோற்றார். பின், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சுனில் குமார், பிலிப்பைன்சின் ராபர்ட்சை சந்தித்தார். முதலில் 2-0 என முந்திய சுனில், பின் 9-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆசிய விளையாட்டு மல்யுத்தத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலம் வென்றார்.

* பெண்களுக்கான 68 கிலோ பிரிவில் இந்தியாவின் நிஷா, முதல் சுற்றில் வடகொரியாவின் பாக் குமிடம் வீழ்ந்தார். வெண்கலம் வெல்வதற்கான 'ரெப்பிசாஜ்' வாய்ப்பில் நிஷா, 4-5 என தென் கொரியாவின் பார்க்கிடம் தோல்வியடைந்து, வெளியேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us