தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்' மழை

ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்' மழை

ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்' மழை


UPDATED : செப் 22, 2026 11:31 PM

ADDED : செப் 21, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 11:31 PM ADDED : செப் 21, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஆசிய விளையாட்டு ஹாக்கியில் ஜுக்ராஜ், அபிஷேக், தில்பிரீத் 'ஹாட்ரிக்' கோல் அடிக்க, இந்திய அணி 16-1 என, இலங்கையை வீழ்த்தியது.

ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. 'டாப்-2' இடம் பெற்றால், அரையிறுதிக்கு செல்லலாம்.

முதல் போட்டியில் இந்தோனேஷியாவை (13-1) வென்ற இந்தியா, நேற்று தனது இரண்டாவது போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது.

போட்டியின் 5வது நிமிடத்தில் மன்தீப் முதல் கோல் அடித்தார். அடுத்து 10, 22, 42, 53வது நிமிடங்களில் அசத்திய ஜுக்ராஜ், நான்கு கோல் அடித்து அசத்தினார். தங்கள் பங்கிற்கு கைகொடுத்த அபிஷேக் (11, 17, 49), தில்பிரீத் (30, 38, 55) 'ஹாட்ரிக்' கோல் அடித்தனர். தவிர சுஹ்ஜீத் (29), மன்பிரீத் (31), பிரசாத் (36) தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி, 16-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 6 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.



டேபிள் டென்னிஸ்: சறுக்கிய இந்தியா

பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியா, தாய்லாந்து மோதின. இதில் இந்தியா 3-2 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. இந்தியா சார்பில் யாஷஸ்வினி (2 வெற்றி), ஸ்ரீஜா அகுலா வெற்றி பெற்றனர்.

அடுத்து நடந்த காலிறுதியில் இந்தியா, வட கொரியாவை சந்தித்தது. இதில் ஸ்ரீஜா, யாஷஸ்வினி, தியா என மூவரும் தோற்க, இந்தியா 0-3 என தோற்று வெளியேறியது.

* ஆண்கள் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்திய அணி 0-3 என தென் கொரியாவிடம் தோற்று வெளியேறியது.

ஏமாற்றிய சிந்து

பெண்கள் அணிகளுக்கான பாட்மின்டன் காலிறுதியில் இந்தியா, ஜப்பான் மோதின. ஒற்றையர் முதல் போட்டியில் இந்தியாவின் சிந்து, 23-21, 18-21, 6-21 என உலகின் 'நம்பர்-3' அகானே யமாகுச்சியிடம் தோற்றார். உன்னதி 16-21, 18-21 என மியாஜகியிடம் வீழ்ந்தார்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி 21-17, 21-16 என புகுஷிமா, மட்சுமோட்டோ ஜோடியை வென்றது.

அடுத்து தான்வி சர்மா 12-21, 10-21 என ஓகுஹராவிடம் தோற்றார். முடிவில் இந்திய அணி 1-3 என தோல்வியடைந்தது.



அனன்ஜீத் சிங் அசத்தல்

ஆண்களுக்கான ஸ்கீட் பிரிவில் நேற்று இரண்டாவது நாள் போட்டி நடந்தது. முதல் நாளில் 24, 25 புள்ளி பெற்ற இவர், நேற்று 23, 24 புள்ளி எடுத்தார். மொத்தம் 96/100 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளார். இன்று மீண்டும் அசத்தினால் 'டாப்-8' இடம் பிடித்து, பைனலுக்கு செல்லலாம். மற்ற இந்திய வீரர்கள் மைராஜ் அகமது (91), பவ்டெஹ் சிங் (86) 23, 35 வது இடங்களில் உள்ளனர்.

பெண்கள் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் ரைசா தில்லான் (92) 5வது இடத்தில் உள்ளார். பரினாஸ் (89), மகேஷ்வரி (85) 9, 16வது இடத்தில் உள்ளனர்.

நழுவிய வெண்கலம்

ஆண்களுக்கான கராத்தே 84 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சேட்டன் பட், 0-8 என ஜோர்டானின் அல்ஜா பரியிடம் வீழ்ந்தார். அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சேட்டன், சீன தைபே வீரர் மெங் யுவை சந்தித்தார். இப்போட்டி 1-1 என சமன் ஆனது. இருப்பினும் போட்டியில் 2 முறை தவறு செய்த சேட்டன் தோற்றதாக அறிவிக்கப்பட்டார். ஒருமுறை தவறு செய்த மெங் யுவுக்கு வெண்கலம் கிடைத்தது.



காலிறுதியில் ஜெய் மீனா

சாப்ட் டென்னிசில் இந்தியாவின் ஜெய் மீனா, 4-0 என பாகிஸ்தானின் அரெய்ன் ஹுசெய்னை சாய்த்து, காலிறுதிக்கு முன்னேறினார். இன்று இதில், பிலிப்பைன்ஸ் வீரர் ஷெர்வினை சந்திக்கிறார்.

* மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை ஆத்யா, 1-4 என தாய்லாந்தின் அலிஷாவிடம் தோல்வியடைந்தார்.



தென் கொரியாவை வென்றது இந்தியா

ஆண்களுக்கான கபடியில் இந்திய அணி 'ஏ' பிரிவில் உள்ளது. முதல் போட்டியில் ஜப்பானை சாய்த்தது. நேற்று இரண்டாவது போட்டியில் இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொண்டது. முதல் பாதியில் இந்தியா 34-14 என வலுவான முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் 29-17 என ஆதிக்கம் செலுத்தியது.

முடிவில் இந்திய அணி 63-31 என்ற கணக்கில், இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அடுத்து இந்திய அணி, இன்று வங்கதேசத்தை சந்திக்க உள்ளது.

அரையிறுதியில் ரோஷிபினா

பெண்களுக்கான உஷூ, 60 கிலோ பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவி, காலிறுதியில் மக்காவின் சு மான் சினை, 'நாக் அவுட்' முறையில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.

* ஆண்களுக்கான 56 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஆர்யன், 1-2 என உஸ்பெகிஸ்தானின் சேதுல்லோவிடம் தோல்வியடைந்தார்.



பாட்மின்டன்: இந்தியா அபாரம்

ஆண்கள் அணிகளுக்கான பாட்மின்டன் காலிறுதியில் இந்தியா, ஜப்பான் மோதின. முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், 11-21, 21-5, 21-19 என நரவோகாவை வென்றார்.

ஆண்கள் இரட்டையரில் சாத்வித்சாய்ராஜ், சிராக் ஜோடி, 21-18, 24-22 என டகுரோ, யுகோ ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு ஒற்றையரில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 21-10, 21-19 என வடனபேவை சாய்த்தார்.

முடிவில் இந்தியா 3-0 என வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

குத்துச்சண்டை: சபாஷ் சாக் ஷி

பெண்களுக்கான குத்துச்சண்டை, 51 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாக் ஷி சவுத்ரி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பிலிப்பைன்சின் அய்ராவை, 5-0 என சாய்த்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

* ஆண்கள் 55 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜடுமானி சிங், 5-0 என நேபாளத்தின் சந்திரா பஹதுர் தபாவை சாய்த்தார்.



ஜிம்னாஸ்டிக்ஸ்: பைனலில் பிரனதி

பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்சில் இந்தியா சார்பில் பிரனதி பங்கேற்கிறார். 19 பேர் களமிறங்கிய வால்ட் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட இவர், 12.916 புள்ளியுடன் 7வது இடம் பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.



இளவேனில் 'நான்கு'

நேற்று துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்கு ஏமாற்றம் கிடைத்தது. 10 மீ., ஏர் ரைபில் கலப்பு அணிகள் பிரிவு போட்டியில் இந்தியா சார்பில் இளவேனில், பார்த் மனே ஜோடி களமிறங்கியது.

ஏற்கனவே பெண்கள் அணிகள், தனிநபர் பிரிவுகளில் 2 வெள்ளி வென்ற இளவேனில், மூன்றாவது பதக்கம் வெல்வார் என நம்பப்பட்டது. தகுதிச்சுற்றில் 634.6 புள்ளியுடன் 2வது இடம் பெற்று, பைனலுக்கு சென்றது. இதில் நான்காவது இடம் (376.5) பிடித்து ஏமாற்றியது.

சிக்கிய தாய்லாந்து வீராங்கனை

நகோயா: தாய்லாந்து பாட்மின்டன் வீராங்கனை பிட்சமான் ஒபட்னிபுத். உலகத் தரவரிசையில் 18 வது இடத்தில் உள்ளார்.

கடந்த வாரம் நடந்த பயிற்சியின் போது 19 வயதான இவரிடம், ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் 'புரோசெமைடு' என்ற தடை செய்யப்பட்ட மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இது, உடலில் அதிக நீரை வெளியேற்றி, எடையை குறைக்க உதவும். தவிர, தடை செய்யப்பட்ட பிற மருந்துகள் உடலில் இருப்பதை மறைத்து விடும்.

இதையடுத்து பிட்சமான் போட்டிகளில் பங்கேற்பது, சக வீராங்கனைகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவது என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us