ADDED : செப் 23, 2026 11:05 PM

நகோயா: ஆசிய விளையாட்டு துப்பாக்கிசுடுதல் 'ஸ்கீட்' பிரிவில் ஆண்களுக்கான தகுதிச்சுற்று நடந்தது. இந்தியா சார்பில் அனன்ஜீத் சிங் (119 புள்ளி) மட்டும் 5வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினார். மைராஜ் அஹமது (116), பாவ்டெஹ் சிங் (111) 12, 29வது இடம் பிடித்து வெளியேறினர். இருப்பினும் தகுதிச்சுற்றில் மூன்று வீரர்கள் இணைந்து எடுத்த புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணிக்கு (346 புள்ளி) மூன்றாவது இடம் கிடைக்க, வெண்கலம் கிடைத்தது.
தனிநபர் பிரிவில் நடந்த பைனலில் அனன்ஜீத் சிங் (25) நான்காவது இடம் பிடித்து ஏமாற்றினார்.
* பெண்களுக்கான 'ஸ்கீட்' பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரைசா தில்லான் (111), பரினாஸ் (111), 8, 9வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினர். மகேஷ்வரிக்கு (109), 12வது இடம் கிடைத்தது. இருப்பினும் தகுதிச்சுற்றில் மூன்று வீராங்கனைகள் இணைந்து, 331 புள்ளி பெற, இந்திய பெண்கள் அணி, மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலம் வசப்படுத்தியது.
அடுத்து நடந்த தனிநபர் பைனலில் ரைசா (23), பரினாஸ் (8) என இருவரும் 4, 8வது (கடைசி) இடம் பெற்றனர். இதுவரை துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியாவுக்கு 4 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கம் கிடைத்தன.
மனு பாகர் 'ஷாக்'
துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில் இந்தியாவின் மனு பாகர், 579 புள்ளியுடன் 3வது இடம் பெற, பைனலுக்கு முன்னேறினார். ஈஷா (572), இந்தர் சிங் (568) 15, 26 வது இடம் பெற்று வெளியேறினர். மூவரும் இணைந்து அணிகளுக்கான பிரிவில் நான்காவது இடம் (1719) பெற, வெண்கலம் பெறும் வாய்ப்பு நழுவியது.
* அடுத்து நடந்த தனிநபர் பிரிவு பைனலில் மனு பாகர், ஒரு கட்டத்தில் 3வது இடத்தில் இருந்தார். பின் ஏமாற்றிய இவர், 181.1 புள்ளியுடன் ஐந்தாவது இடம் பெற்று வெளியேறினார்.
