ADDED : செப் 23, 2026 11:04 PM

நகோயா: ஆசிய விளையாட்டு ஆண்கள் ஒற்றையர் சாப்ட் டென்னிசில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் ஜெய் மீனா 26, பிலிப்பைன்சின் ஷெர்வினை எதிர்கொண்டார். முதல் கேமை 0-4 என இழந்த ஜெய், அடுத்த கேமை 4-2 என கைப்பற்றினார். 3வது கேமை 2-4 என நழுவவிட்ட இவர், அடுத்த இரு கேம்களை 4-2, 5-3 என வசப்படுத்தினார். 6வது கேமை 2-4 என இழக்க, ஸ்கோர் 3-3 என சமன் ஆனது. கடைசி, 7வது கேம் இழுபறி ஆனது. இதை ஜெய் 7-5 என போராடி கைப்பற்றினார்.
முடிவில் ஜெய், 4-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டு சாப்ட் டென்னிசில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்தார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜெய், முதலில் கிரிக்கெட் வீரராக வர விரும்பினார். பள்ளியில் சக மாணவர்கள் சாப்ட் டென்னிஸ் விளையாடிய போது, பந்துகளை எடுத்து தந்து உதவினார். கடைசியில் இப்போட்டியில் ஆர்வம் அதிகரிக்க, தற்போது பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
