தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய விளையாட்டு உஷு: பைனலில் ரோஷிபினா

ஆசிய விளையாட்டு உஷு: பைனலில் ரோஷிபினா

ஆசிய விளையாட்டு உஷு: பைனலில் ரோஷிபினா


ADDED : செப் 23, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஜப்பானில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. இதில் பெண்களுக்கான உஷு 'சாண்டா' 60 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி, இந்தோனேஷியாவின் தானியா மோதினர். இதில் ரோஷிபினா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டில் தனது 3வது பதக்கத்தை உறுதி செய்தார். ஏற்கனவே இவர், ஒரு வெள்ளி (2022), ஒரு வெண்கலம் (2018) வென்றிருந்தார். இன்று நடக்கவுள்ள பைனலில் ரோஷிபினா, சீனாவின் ஜியாவோயு ஜாங்கை சந்திக்கிறார்.

ஹாக்கி: தீபிகா சாதனை

பெண்கள் ஹாக்கி 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 20-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டியில் உஸ்பெகிஸ்தான், இந்தோனேஷியாவை வென்ற இந்தியா, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.

இந்திய அணிக்கு தீபிகா ஷெராவத் 9 கோல் (2, 8, 9, 24, 33, 36, 39, 51, 57வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். இவர், 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் 9 கோல் பதிவு செய்தார். மற்ற இந்திய வீராங்கனைகளான நவ்னீத் கவுர் 4 (4, 29, 35, 51வது நிமிடம்), ருதுஜா பிசால் 3 (10, 11, 47), நேஹா கோயல் (19), லால்ரெம்சியாமி (26), சாக் ஷி ராணா (29), கேப்டன் சலிமா (45) தலா ஒரு கோல் அடித்தனர். தாய்லாந்து அணிக்கு சுபான்சா சமான்சோ (57வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.

முதல் வீராங்கனை: சர்வதேச ஹாக்கி அரங்கில், ஒரு போட்டியில் 9 கோல் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார் தீபிகா. கடந்த 3 போட்டியில் 20 கோல் (உஸ்பெகிஸ்தான்-8, இந்தோனேஷியா-3, தாய்லாந்து-9) அடித்துள்ளார் தீபிகா.

கபடி: இந்தியா ஆதிக்கம்

பெண்களுக்கான கபடி 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, ஈரானை சந்தித்தது. முதல் பாதி முடிவில் 19-15 என முன்னிலையில் இருந்த இந்தியா, 2வது பாதியில் 18 புள்ளி பெற்றது. ஈரானுக்கு 8 புள்ளி மட்டும் கிடைத்தது. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 37-23 என்ற கணக்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது. முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, கடைசி போட்டியில் ஜப்பானை சந்திக்கிறது.

ஆண்களுக்கான கபடி 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, வங்கதேசத்தை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 48-25 என்ற கணக்கில், தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது. முதல் போட்டியில் ஜப்பானை வென்ற இந்தியா, கடைசி லீக் போட்டியில் சீனதைபே அணியை எதிர்கொள்கிறது.

டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடி அபாரம்

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், யாஷஸ்வினி ஜோடி 3-1 (11-6, 11-5, 10-12, 11-7) என்ற கணக்கில் ஹாங்காங்கின் குவான் டோ, விங் லாம் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் மானுஷ் ஷா, தியா ஜோடி 3-0 (11-0, 11-7, 11-6) என, மாலத்தீவின் மூசா அகமது, ஆயிஷாத் நசிம் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

ஸ்குவாஷ்: அபே சிங் அசத்தல்

ஸ்குவாஷ் போட்டிக்கான ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் இந்தியாவின் அபே சிங் 3-0 (11-1, 11-0, 11-2) என, தாய்லாந்தின் அர்கராடெட்டை வீழ்த்தினார். மற்றொரு 'ரவுண்டு-32' போட்டியில் இந்தியாவின் வீர் சோட்ரானி 3-0 (11-8, 11-3, 11-3) என இலங்கையின் ஷாமில் வகீலை வென்றார். பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் தான்வி கன்னா 3-0 (11-5, 11-7, 11-5) என, தென் கொரியாவின் டாமி கிம்மை வீழ்த்தி, 'ரவுண்டு-16' போட்டிக்கு தகுதி பெற்றார்.

குத்துச்சண்டை: காலிறுதியில் அன்குஷ்

ஆண்களுக்கான குத்துச்சண்டை 80 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் அன்குஷ் பங்கால், பஹ்ரைனின் ஹம்சா வோகல் மோதினர். காமன்வெல்த் விளையாட்டில் (2026) தங்கம் வென்ற அன்குஷ், தனது அறிமுக ஆசிய விளையாட்டு போட்டியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதில், தஜிகிஸ்தானின் நெக்ரூஸ் சலிமோவை சந்திக்க உள்ளார்.

கால்பந்து: சீனா முன்னேற்றம்

ஆசிய விளையாட்டு, ஆண்களுக்கான கால்பந்து 'பி' பிரிவு லீக் போட்டியில் சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் வட கொரிய அணி 4-1 என ஈரானை வென்றது. லீக் சுற்றின் முடிவில் 'பி' பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த சீனா (5 புள்ளி), வட கொரியா (4) அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

கூடைப்பந்து: தென் கொரியா கலக்கல்

பெண்களுக்கான கூடைப்பந்து (3X3) 'டி' பிரிவு லீக் போட்டியில் சிங்கப்பூர், தென் கொரியா அணிகள் மோதின. இதில் தென் கொரிய அணி 22-13 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே தாய்லாந்து, சிங்கப்பூர் அணிகளை வீழ்த்திய தென் கொரிய அணி, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது. 'சி' பிரிவில் மங்கோலியா, மக்காவ், மலேசியாவை வென்ற பிலிப்பைன்ஸ் அணி, காலிறுதிக்குள் நுழைந்தது.

ஹேண்ட்பால்: ஜப்பான் அபாரம்

பெண்களுக்கான ஹேண்ட்பால் லீக் போட்டியில் ஜப்பான், சீனா அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 33-27 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு போட்டியில் தென் கொரிய அணி 43-13 என, உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. கஜகஸ்தான் அணி 34-27 என, ஹாங்காங்கை வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us