ADDED : செப் 23, 2026 10:55 PM

சமர்கண்ட்: உஸ்பெகிஸ்தானில், செஸ் ஒலிம்பியாட் 46வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவு 7 வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, இங்கிலாந்தை சந்தித்தது. இந்திய அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹால் சரின், அர்ஜுன் களமிறங்கினர். பிரக்ஞானந்தா-நிகிடா மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 31வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார் உலக சாம்பியன் குகேஷ். இதில் 49 வது நகர்த்தலில் டேனியலை வீழ்த்தினார். அர்ஜுன்-மைக்கேல் மோதிய போட்டி 'டிரா' ஆனது. நிஹால் சரின், லுகேவிடம் தோல்வியடைந்தார். முடிவில் இந்திய அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பெண்கள் கலக்கல்
பெண்கள் பிரிவில் இந்தியா, 7வது சுற்றில் ஜெர்மனியை சந்தித்தது. 'நடப்பு சாம்பியன்' இந்திய அணியில் ஹம்பி, வைஷாலி, திவ்யா, சவிதா ஸ்ரீ பங்கேற்றனர். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய உலக கோப்பை சாம்பியன் திவ்யா, 40 வது நகர்த்தலில் ஹன்னாவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் ஹம்பி, டினாராவை வென்றார். சவிதா ஸ்ரீ, லாராவை சாய்த்தார். வைஷாலி-எலிசபெத் மோதிய போட்டி டிரா ஆனது. முடிவில் இந்திய அணி 3.5-0.5 என வெற்றி பெற்றது.
