ஆசிய விளையாட்டுக்கு ரூ. 800 கோடி: கடந்த மூன்று ஆண்டுகளாக செலவு
ஆசிய விளையாட்டுக்கு ரூ. 800 கோடி: கடந்த மூன்று ஆண்டுகளாக செலவு
ADDED : செப் 15, 2026 11:53 PM

புதுடில்லி: ஆசிய விளையாட்டுக்காக கடந்த மூன்று ஆண்டில் ரூ. 800 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டு, வரும் 19 முதல் அக். 4 வரை நடக்க உள்ளது. 17,000 பேர் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் 35 வகையான விளையாட்டில், 267 வீரர், 234 வீராங்கனைகள் என மொத்தம் 501 பேர் களமிறங்குகின்றனர். தவிர 265 உதவியாளர்கள் செல்ல உள்ளனர்.
இதில் 310 பேர் முதன் முறையாக ஆசிய விளையாட்டில் பங்கேற்க உள்ளனர். கடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 107 பதக்கம் வென்றது. இம்முறை கூடுதல் பதக்கம் வெல்லும் வகையில், கடந்த மூன்று ஆண்களில் வீரர், வீராங்கனைகள் பயிற்சி, தேவையான பொருட்கள் வாங்கியது போன்ற செலவுகளுக்காக ரூ. 702 கோடி தரப்பட்டுள்ளன.
தவிர ஒவ்வொரு ஆண்டும் நடந்த பல்வேறு போட்டிக்கு தயாராவதற்காக ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் படி, ரூ. 97.84 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ. 800 கோடி வரை செலவாகி உள்ளன.
இதுகுறித்து ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோஹல் கூறியது:
ஆசிய விளையாட்டு அணியில் இம்முறை அதிக புதுமுக நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளது பெருமையாக உள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுகளில் அசத்திய 65 பேர் ஜப்பான் செல்கின்றனர். இளம் வீரர், வீராங்கனைகள் வருகை, எதிர்காலத்தில் இந்தியாவின் பதக்க வேட்டைக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
பல்வேறு சங்கங்களில் நிலவும் நிர்வாக சிக்கல்கள் இருந்த போதும், விளையாட்டு நட்சத்திரங்கள் சிறப்பாக செயல்பட தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வைபவ் 'நோ'
இந்தியாவின் 15 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, டேபிள் டென்னிசின் சிண்ட்ரெலா, பாட்மின்டனின் ஆயுஷ் ஷெட்டி, 18 வயது ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் உள்ளிட்டோர், ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் படி நிதி உதவி பெறாதவர்கள் பட்டியலில் உள்ளனர்.
