ADDED : செப் 15, 2026 11:52 PM

சமர்கண்ட்: சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில், 1927 முதல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 46வது சீசன் இன்று முதல் செப். 27 வரை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடக்க உள்ளது. ஓபன் பிரிவில் 208, பெண்கள் பிரிவில் 192 என மொத்தம் 400 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த சீசனை (2024ல் 380) விட இது அதிகம்.
நடப்பு சாம்பியன்
இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த சீசனில் முதன் முறையாக ஓபன், பெண்கள் என இரு பிரிவிலும் தங்கம் வென்று வரலாறு படைத்தது. இம்முறை ஒபன் பிரிவில் இந்தியா 'நம்பர்-2' அந்தஸ்துடன் களமிறங்குகிறது. உலக செஸ் நடப்பு சாம்பியன் குகேஷ், உலகத்தரவரிசையின் 'நம்பர்-8' வீரர் பிரக்ஞானந்தா, 'நம்பர்-9' ஆக உள்ள அர்ஜுன் எரிகைசி, நிஹால் சரின், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி என இளம் வீரர்கள் சாதிக்க உள்ளனர்.
தவிர ஓபன் பிரிவில் அமெரிக்கா அணியில் சோ வெஸ்லே, லெவான் ஆரோனியன், பேபியானோ, அவாண்டர் லியாங் என அனுபவ வீரர்கள் இருப்பது இந்தியாவுக்கு பெரும் சவாலாக அமையலாம்.
தவிர சொந்தமண்ணில் பங்கேற்கும் உஸ்பெகிஸ்தானின் சிந்தரோவ், அப்துசட்டோரோவ், யாகுபோயவ், சீனாவின் டிங் லிரென், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் நெருக்கடி தர காத்திருக்கின்றனர்.
ஹம்பி, திவ்யா...
பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு 'நம்பர்-1' அந்தஸ்து தரப்பட்டுள்ளது. இதில் அனுபவ கோனேரு ஹம்பியுடன், உலக கோப்பை வென்ற திவ்யா, வைஷாலி, வந்திகா, சவிதா ஸ்ரீ இடம் பெற்றுள்ளனர். கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட திவ்யா, வந்திகா உள்ளிட்டோர் அசத்தினால் மீண்டும் இந்தியா கோப்பை கைப்பற்றலாம்.
இதுவரை நான்கு
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி இதுவரை 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கம் வென்றுள்ளது. ஓபன் பிரிவில் 2024ல் தங்கம், 2014 (நார்வே), 2022ல் (சென்னை) வெண்கலம் வென்றது.
* பெண்கள் பிரிவில் 2024ல் தங்கம் கைப்பற்றியது.
* ஆன்லைனில் நடந்த தொடரில் 2020ல் தங்கப்பதக்கத்தை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொண்டது. 2021ல் வெண்கலம் வென்றது.
5 மணி நேரம் காத்திருப்பு
இந்திய அணி கேப்டன் ஸ்ரீநாத் நாராயணன் கூறுகையில்,'' சமர்கண்ட் விமானநிலையத்தில் 5 மணி நேரமாக காத்திருக்கிறோம். இன்னும் எங்களுக்கு ஓட்டல் அறை ஒதுக்கப்படவில்லை. இது மோசமான அனுபவமாக உள்ளது,'' என்றார்.
