நீரஜ் சோப்ரா 2வது இடம் * 9 செ.மீ., நழுவிய முதலிடம்
நீரஜ் சோப்ரா 2வது இடம் * 9 செ.மீ., நழுவிய முதலிடம்
ADDED : ஆக 22, 2026 11:31 PM

லாசேன்: லாசேன் டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, இரண்டாவது இடம் பிடித்தார்.
சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டைமண்ட் லீக் தடகளம் நடந்தது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 28, பங்கேற்றார். நடப்பு சீசனில் பங்கேற்ற இரண்டாவது டைமண்ட் லீக் தடகளம் இது. சமீபத்தில் கத்தார் போட்டியில் இவர் 4வது இடம் பெற்றிருந்தார்.
இம்முறை முதல் வாய்ப்பில் 83.54 மீ., துாரம் எறிந்த நீரஜ் சோப்ரா, அடுத்து அதிகபட்சம் 88.05 மீ., எறிந்தார். பின் மூன்று (83.72), கடைசி, 6வது வாய்ப்பில் (82.15) ஏமாற்றினார். 4, 5வது வாய்ப்பில் 'பவுல்' செய்தார்.
மறுபக்கம் 3 வது வாய்ப்பில் மிரட்டிய இலங்கையின் ருமேஷ் தரங்கா, 88.14 மீ., துாரம் எறிந்து முதலிடம் பெற்றார்.
இதையடுத்து 9 செ.மீ., வித்தியாசத்தில் பின் தங்கிய, நீரஜ் சோப்ராவுக்கு (88.05) இரண்டாவது இடம் கிடைத்தது. நடப்பு சீசனில் இவரது சிறந்த செயல்பாடாக இது அமைந்தது. முன்னதாக 2025, பாரிஸ் போட்டியில் 88.16 மீ., துாரம் எறிந்து இருந்தார்.
கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (86.69) மூன்றாவது இடம் பிடித்தார்.
ஐந்தாவது இடம்
நடப்பு டைமண்ட் லீக் சீசனில் இதுவரை முடிந்த போட்டிகள் முடிவில், 2 இடம் முந்திய நீரஜ் சோப்ரா (12 புள்ளி) 5வது இடத்துக்கு முன்னேறினார். முதல் 4 இடத்தில் ருமேஷ் தரங்கா (31), ஆண்டர்சன் (28), அமெரிக்காவின் கர்டிஸ் தாம்ப்சன் (18), டிரினிடாட்டின் வால்காட் (18) உள்ளனர். 'டாப்-6' வீரர்கள் டைமண்ட் லீக் பைனலில் (பெல்ஜியம், செப். 4-5) பங்கேற்கலாம்.
