ADDED : ஆக 22, 2026 11:04 PM

லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கிளப் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. லண்டனில் நடந்த முதல் லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' ஆர்சனல் அணி, கோவன்ட்ரி சிட்டி அணியை சந்தித்தது. ஹாவர்ட்ஸ் (15வது நிமிடம்), புகாயோ சாகா (23), மார்டின் ஓடேகார்ட் (49) தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க, ஆர்சனல் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ரொனால்டோ '977'
ரியாத்: சவுதி அரேபியாவில், சவுதி புரோ லீக் கால்பந்து 70வது சீசன் நடக்கிறது. ரியாத்தில் நடந்த லீக் போட்டியில் அல் நாசர் அணி 4-0 என அல் ரியாத் அணியை வீழ்த்தியது. அல் நாசர் அணி சார்பில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இது, ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் இவரது 977வது கோல். இவர், இன்னும் 23 கோல் அடிக்கும் பட்சத்தில் 1000 கோல் என்ற மைல்கல்லை எட்டலாம்.
அரையிறுதியில் கோகோ காப்
சின்சினாட்டி: அமெரிக்காவில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் மார்டா கோஸ்டியுக் மோதினர். இதில் கோகோ காப் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் மடிசன் கீஸ் 6-3, 4-6, 6-7 என, செக்குடியரசின் சாரா பெஜ்லெக்கிடம் தோல்வியடைந்தார்.
எக்ஸ்டிராஸ்
* சுலோவாகியாவில், உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப் (20 வயது) நடக்கிறது. பெண்களுக்கான 68 கிலோ பைனலில் இந்தியாவின் மான்சி 1-2 என, சீனாவின் சென்லிங் சாங்கிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். மற்ற எடைப்பிரிவில் இந்தியாவின் தான்வி (57 கிலோ), கோமல் (59 கிலோ) வெண்கலம் கைப்பற்றினர்.
* பெங்களூருவில் இன்று துவங்கும் துலீப் டிராபி கிரிக்கெட் தொடருக்கான காலிறுதியில், வடக்கு - மேற்கு, கிழக்கு - வடகிழக்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன.
* கான்பூரில், தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், இந்திய ரிசர்வ் வங்கி அணியின் மானுஷ் ஷா 3-2 (11-3, 11-3, 3-11, 7-11, 11-8) என, தமிழகத்தின் பாலமுருகனை வீழ்த்தினார்.
* சென்னையில் நடந்த சதர்ன் ஸ்லாம் ஸ்குவாஷ், பெண்களுக்கான பைனலில் ராதிகா சீலன் 3-0 (11-4, 11-9, 11-3) என, பூஜா ஆர்த்தியை வீழ்த்தினார். ஆண்களுக்கான பைனலில் ராகுல் பைதா 3-0 (11-3, 13-11, 11-8) என, குர்வீர் சிங்கை தோற்கடித்தார்.
