ADDED : ஜூலை 29, 2025 11:00 PM

புதுடில்லி: உலக தடகள சாம்பியன்ஷிப் வரும் செப். 13-21ல் ஜப்பானின் டோக்கியோவில் நடக்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் சமீபத்தில் மொனாக்கோவில் நடந்த 'டைமண்ட் லீக்' தடகளத்தில் இந்தியாவின் அவினாஷ் சபிள் 30, பங்கேற்றார்.
3000 மீ., ஸ்டீபிள் சேஸ் போட்டியில் களமிறங்கிய இவர், தடையை தாண்டி, நீரில் குதித்த போது, முன்னாள் சென்ற வீரர் மீது, மோதி விழுந்தார். வலது முழங்காலில் தசை நாள் கிழிந்தது.
இதையடுத்து மும்பையில் நேற்று இவருக்கு ஆப்பரேஷன் நடந்தது. இதுகுறித்து அவினாஷ் வெளியிட்ட செய்தியில்,' முழங்காலில் ஆப்பரேஷன் நடந்தது. இந்திய தடகள கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம் உட்பட எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி,' என தெரிவித்துள்ளார்.
காயத்தில் இருந்து மீண்டு வர குறைந்தது 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை தேவைப்படலாம் என்பதால், வரும் உலக தடகளத்தில் அவினாஷ் பங்கேற்க முடியாது.

