/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தடகளம்: தடம் பதித்த தமிழகம்
/
தடகளம்: தடம் பதித்த தமிழகம்
ADDED : ஜூன் 28, 2025 11:19 PM

பெங்களூரு: இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில், பெங்களூரு, கன்டீவ்ரா மைதானத்தில், இந்தியன் ஓபன் தடகளம் நடந்தது. பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் கோபிகா, தங்கம் கைப்பற்றினார். இவர், 1.80 மீ., உயரம் தாண்டினார். ஆண்கள் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் ஆதர்ஷ் ராம் (2.13 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார்.
போல் வால்ட் போட்டியில் தமிழக வீராங்கனை சத்யா, 3.95 மீ., உயரம் தாவி, தங்கம் வென்றார். மற்றொரு வீராங்கனை பரனிகாவுக்கு (3.80) வெண்கலம் கிடைத்தது.
குண்டு எறிதலில் தமிழகத்தின் விஷ்வா ஐயப்பன் (16.99 மீ.,) தங்கம், ஆண்கள் போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் கவுதம் (4.90 மீ.,) வெண்கலம், ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தமிழகத்தின் கெய்லே வெனிஸ்டர் (16.00 மீ.,) வெண்கலம் வென்றனர்.
ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் வருண் மனோகர் ('ஜி' பிரிவு), கிருஷ்ண ராஜ் ('எச்' பிரிவு) முதலிடம் பெற்றனர். பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் மரியா நிவேதா ('பி' பிரிவு), முதலிடம் பெற்றனர்.
110 மீ., தடை ஓட்டத்தில் தமிழக வீரர்கள் அரவிந்த் (14.63 வினாடி, 'பி' பிரிவு), தனுஷ் ஆதித்தன் (14.20, 'சி' பிரிவு) முதலிடம் பெற்றனர். 'பி' பிரிவில் பாரி கபிலன் (15.02), தன ஆனந்த் (15.55) 2, 3வது இடம் பிடித்தனர். 100 மீ., தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனைகள் நந்தினி (13.85, 'ஏ'), ஸ்ரீரேஸ்மா (13.95, 'பி') இரண்டாவது இடம் பெற்றனர்.
ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் ராஜேஷ் ரமேஷ் (45.97 வினாடி), பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் அஸ்வினி (58.26) தங்கம் கைப்பற்றினர். பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ரயில்வே வீராங்கனை பவானி (6.31) தங்கம் கைப்பற்றினார்.