ADDED : நவ 17, 2025 11:04 PM

கோல்கட்டா: இந்திய கால்பந்து அணி சமீபத்திய போட்டிகளில் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதனால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியவில்லை. இதுகுறித்து இந்தியா வந்துள்ள ஜெர்மனி கால்பந்து 'ஜாம்பவான்' மத்தாயஸ் கூறுகையில்,'' சிறந்த பயிற்சியாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்பவர்கள் தான் உலகத்தரமான வீரர்களாக உருவாக முடியும். இப்போதைய நிலையில் இந்திய கால்பந்துக்கு சிறந்த பயிற்சியாளர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களால் தான் தரமான வீரர்களை உருவாக்க முடியும். இதை பள்ளிகளில் இருந்து துவக்க வேண்டும்,'' என்றார்.
ஆஸி., வீராங்கனை மரணம்
அடிலெய்டு: ஆஸ்திரேலிய பாரா சைக்கிளிங் வீராங்கனை பெய்ஜ் கிரெகோ 28. உடல் இயக்கங்களை பாதிக்கும் பெருமூளை வாதத்துடன் பிறந்தார். டோக்கியோ பாராலிம்பிக்கில், புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றார். மற்றொரு பிரிவில் வெண்கலம் கைப்பற்றினார். அடிலெய்டில் உள்ள தனது வீட்டில் இருந்த போது, திடீரென நேற்று மரணம் அடைந்தார். தாயார் நாடாலி கூறுகையில்,'' பெய்ஜ் மன உறுதி, கனிவு, அர்ப்பணிப்பு உணர்வு என அவரது செயல்கள் எங்கள் மனதை தொட்டன. எங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, பெருமையை கொண்டு வந்தவர்,'' என்றார்.
சங்ககரா மீண்டும் பயிற்சியாளர்
புதுடில்லி: பிரிமியர் கிரிக்கெட் தொடரின் முதல் சீசனில் கோப்பை வென்றது ராஜஸ்தான். இதன் பின் கோப்பை வென்றது இல்லை. வரும் சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய ஜடேஜா, சாம் கர்ரான் வரும் சீசனில், கைகொடுக்க உள்ளனர். இதனிடையே பயிற்சியாளராக இருந்த டிராவிட், கடந்த ஆகஸ்ட் மாதம் விலகினார். இதையடுத்து 2021-24ல் இருந்த இலங்கை அணி முன்னாள் கேப்டன் சங்ககரா, மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
எக்ஸ்டிராஸ்
* ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் ஏமாற்றிய இந்தியா, ஆசிய கோப்பை வாய்ப்பை இழந்தது. இன்று தாகாவில் நடக்கும் தனது கடைசி போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
* சிட்னியில் நடக்கும் சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கரண் சிங் 7-6, 6-3 என்ற நேர் செட்டில் சக வீரர் ஆர்யன் ஷாவை வீழ்த்தினார்.
* ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் இன்று சிட்னியில் துவங்குகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஒற்றையர் பிரிவில் லக்சயா, பிரனாய் இதில் பங்கேற்கின்றனர்.
* எகிப்தின் கெய்ரோவில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் நடந்தது. ஆண்களுக்கான 25 மீ. சென்டிரல் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங், வெள்ளிப்பதக்கம் வென்றார். இத்தொடரில் 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது.
* உலக டென்னிஸ் தரவரிசை பட்டியல் வெளியானது. ஒற்றையரில் இந்தியாவின் சுமித் நாகல், 2 இடம் முன்னேறி, 273 வது இடம் பிடித்தார். சசிக்குமார் முகுந்த் (519) ஒரு இடம் முந்தினார்.
தமிழகம் அபாரம் * கூச் பெஹர் டிராபியில்
தேனி: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கூச் பெஹர் டிராபி (4 நாள் போட்டி) தொடர் நடக்கிறது. தேனி, தமிழக கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கும் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' தமிழகம், மத்திய பிரதேச அணிகள் மோதுகின்றன.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. தமிழக அணி முதல் இன்னிங்சில் 352 ரன்னில் ஆல் அவுட்டானது.
மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 145 ரன்னில் சுருண்டது. தமிழகத்தின் பவிஷ் 4, சந்தீப் 3, பென்னி 2 விக்கெட் சாய்த்தனர்.
பின் 'பாலே ஆன்' பெற்று, இரண்டாவது இன்னிங்சை தொடந்த மத்திய பிரதேச அணி, இரண்டாவது நாள் முடிவில், ரன் எடுக்காமல் ஒரு விக்கெட்டை இழந்து, 207 ரன் பின்தங்கி இருந்தது. இன்று தமிழக பவுலர்கள் அசத்தினால், இன்னிங்ஸ் வெற்றி பெறலாம்.

