ADDED : ஏப் 22, 2026 10:28 PM

லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து
34வது சீசன் நடக்கிறது. லண்டனில் நடந்த போட்டியில் பிரைட்டன், செல்சி
அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய செல்சி அணி 0-3 என தோல்வியடைந்தது.
தொடர்ச்சியாக 5வது தோல்வியை பெற்ற செல்சி அணி, 48 புள்ளிகளுடன் (13 வெற்றி,
9 'டிரா', 12 தோல்வி) 7வது இடத்தில் உள்ளது. 'டாப்-5' அணிகள் மட்டுமே
சார்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற முடியும். நான்கு போட்டிகள் மீதமுள்ள
நிலையில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் செல்சி அணி உள்ளது
வீனஸ் விருப்பம்
மாட்ரிட்: ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 4-6 என, ஸ்பெயினின் கெய்ட்லின் கெவேடோவிடம் தோல்வியடைந்தார். டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் தொடர்ச்சியாக 10வது தோல்வியை பெற்ற வீனசின் பார்வை பிரெஞ்ச் ஓபன் மீது திரும்பி உள்ளது. இவர், கடைசியாக 2021ல் பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்றார். இதில், முதல் சுற்றில் செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவிடம் தோல்வியடைந்தார்.
ரியல் மாட்ரிட் அசத்தல்
மாட்ரிட்: ஸ்பெயினில், 'லா லிகா' கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மாட்ரிட் நகரில் நடந்த லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், டெபோர்டிவோ அலாவெஸ் அணிகள் மோதின.
இதில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரியல் மாட்ரிட் அணிக்கு எம்பாப்வே (30வது நிமிடம்), வினிசியஸ் ஜூனியர் (50வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். அலாவெஸ் அணிக்கு மார்டினெஸ் (90+3வது) ஆறுதல் தந்தார்.
இதுவரை விளையாடிய 32 போட்டியில், 23 வெற்றி, 4 'டிரா', 5 தோல்வி என, 73 புள்ளிகளுடன் ரியல் மாட்ரிட் அணி 2வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் பார்சிலோனா அணி (79 புள்ளி) உள்ளது.
எக்ஸ்டிராஸ்
* டேராடூனில், மாநிலங்களுக்கு இடையிலான ஜூனியர், யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் அணிகளுக்கான (19 வயது) பைனலில் தமிழகம், மகாராஷ்டிரா அணிகள் மோதின. பாலமுருகன், அபினந்த், மேஹன் அடங்கிய தமிழக அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
* தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் அணி, 2 ஒருநாள், 3 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் (ஏப். 25 - மே 2, பிரிட்டோரியா) பங்கேற்கிறது. இதற்கான புதிய ஜெர்சியை, இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் சங்கம் அறிமுகம் செய்தது.
* சிங்கப்பூர் ஓபன் கோல்ப் தொடர் இன்று துவங்குகிறது. இதில், இந்தியா சார்பில் கரண்தீப், ககன்ஜீத் புல்லார், ஜீன் மில்கா சிங் உள்ளிட்ட 11 பேர் பங்கேற்கின்றனர்.
* ஹரியானாவின் பானிபட்டில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி 6-3, 6-2 என, சக வீராங்கனை சூர்யான்ஷி ஷெகாவத்தை வீழ்த்தினார்.
