ADDED : நவ 11, 2026 08:49 PM

புடாபெஸ்ட்: ‘டோட்டல்’ செஸ் தொடரின் முதல் நாளில் இந்தியாவின் அர்ஜுன், வைஷாலி சிறப்பாக செயல்பட்டனர்.
ஹங்கேரியில் ‘டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்’ தொடர் நேற்று துவங்கியது. வழக்கமான தொடர் போல இல்லாமல், ‘கிளாசிக்’ (தலா 45 நிமிடம்), ‘ரேபிட்’ (தலா 15 நிமிடம்), ‘பிளிட்ஸ்’ (தலா 3 நிமிடம்) என மூன்று பிரிவிலும் போட்டி நடக்கும். முடிவில் ஒட்டுமொத்த செயல்பாடு அடிப்படையில் வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். மொத்த பரிசுத் தொகை ரூ. 6.1 கோடி.
இதில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன், வைஷாலி உட்பட 24 பேர் பங்கேற்கின்றனர். முதல் நாளில் ‘பிளிட்ஸ்’ முறையில் போட்டி நடந்தன. இதில் கார்ல்சன் (7.0) முதலிடம் பிடித்தார். பிரான்சின் வேசியர் (6.5), அமெரிக்காவின் ஆரோனியன் (6.0) அடுத்த இரு இடம் பெற, அர்ஜுன் (5.5), பிரக்ஞானந்தா (4.5), 6, 14வது இடம் பெற்றனர். அமெரிக்காவின் சோ வெஸ்லே, நைமானை வீழ்த்திய வைஷாலி (4.0), 17வது இடம் பெற்றார்.
தற்போது, மேற்கண்ட வரிசைப்படி, 24 பேர், தலா 6 என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். இவர்கள் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத உள்ளனர்.
