/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ் ஒலிம்பியாட்: இந்தியா 'டிரா'
/
செஸ் ஒலிம்பியாட்: இந்தியா 'டிரா'
ADDED : செப் 21, 2024 10:33 PM

புடாபெஸ்ட்: செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா-உஸ்பெகிஸ்தான், இந்தியா-அமெரிக்கா (பெண்கள்) அணிகள் மோதிய 9வது சுற்று 'டிரா' ஆனது.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில், செஸ் ஒலிம்பியாட் 45வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவு 9வது சுற்றில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இந்தியா சார்பில் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி களமிறங்கினர். முதல் போட்டியில் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 32வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
மற்றொரு போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் சின்டாரோவ் ஜாவோகிர் மோதினர். இதில் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 36வது நகர்த்தலின் போது 'டிரா' செய்தார். மற்ற இந்திய வீரர்களான அர்ஜுன், விதித் குஜ்ராத்தி ஆகியோரும் தங்களது ஆட்டத்தை 'டிரா' செய்தனர். முடிவில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது.
ஒன்பது சுற்றுகளின் முடிவில் இந்தியா 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
வந்திகா ஆறுதல்பெண்கள் பிரிவு 9வது சுற்றில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. முதல் போட்டியில் தமிழகத்தின் வைஷாலி தோல்வியடைந்தார். அடுத்த இரு போட்டிகளில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், தனியா சச்தேவ் 'டிரா' செய்தனர். மற்றொரு போட்டியில் இந்தியாவின் வந்திகா அகர்வால், அமெரிக்காவின் கிரஷ் இரினா மோதினர். கறுப்பு நிற காய்களுடன் சாமர்த்தியமாக விளையாடிய வந்திகா, 35வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முடிவில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது.
ஒன்பது சுற்றுகளின் முடிவில் இந்திய பெண்கள் அணி 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் கஜகஸ்தான் (16 புள்ளி) உள்ளது.