ADDED : மார் 05, 2024 10:02 PM

பிராகு: பிராகு செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
செக் குடியரசில் பிராகு சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி பங்கேற்கின்றனர். இதன் ஆறாவது சுற்றில் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை எதிர்கொண்டார். இதில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார் பிரக்ஞானந்தா. துவக்கத்தில் சமபலத்தில் மோதினர். போட்டியின் 36 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா ஆதிக்கம் துவங்கியது. வேறு வழியில்லாத நிலையில் 56 வது நகர்த்தலில் நாடிர்பெக் தோல்வியடைந்தார்.
மற்றொரு போட்டியில் குகேஷ், போலந்தின் பார்டெல் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 40 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். விதித் குஜ்ராத்தி, ஜெர்மனியின் வின்சென்ட்டிடம் வீழ்ந்தார்.
இதுவரை முடிந்த ஆறு சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (4.0), ஹங்கேரியின் ரிச்சர்டு (3.5), ஈரானின் பர்ஹாம் (3.5), பிரக்ஞானந்தா (3.5) முதல் நான்கு இடத்தில் உள்ளனர். குகேஷ் (2.5) 8வது, விதித் குஜ்ராத்தி (2.0) 9வது இடங்களில் உள்ளனர்.

