ADDED : நவ 14, 2024 10:35 PM

கோல்கட்டா: டாடா ஸ்டீல் இந்தியா செஸ் தொடரின் 5வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
கோல்கட்டாவில், டாடா ஸ்டீல் இந்தியா செஸ் தொடர் நடக்கிறது. இதில் ஓபன் பிரிவு 'ரேபிட்' முறையிலான போட்டிகள் 9 சுற்றுகளாக நடக்கின்றன. நான்காவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய தமிழகத்தின் பிரக்ஞானந்தா, 52வது நகர்த்தலில் ஆட்டத்தை 'டிரா' செய்தார்.
மற்றொரு போட்டியில் நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் நாராயணனை வீழ்த்தினார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் சோ வெஸ்லேயிடம் தோல்வியடைந்தார்.
அடுத்து நடந்த 5வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நிஹால் சரின் மோதினர். இதில் பிரக்ஞானந்தா, 103வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்ற இந்திய வீரர்களான விதித் சந்தோஷ், அர்ஜுன், நாராயணன், தங்களது ஆட்டத்தை 'டிரா' செய்தனர்.
இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் மோதிய 6வது சுற்றுப் போட்டி, 34வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
ஆறு சுற்றுகளின் முடிவில் கார்ல்சன், 5.0 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். அடுத்த இரு இடங்களில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் (4.5 புள்ளி), அமெரிக்காவின் சோ வெஸ்லே (3.5) உள்ளனர். பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் டேனியல் டுபோவ், 4வது இடத்தை (தலா 3.0 புள்ளி) பகிர்ந்து கொண்டுள்ளனர்.

