ADDED : அக் 10, 2025 10:53 PM

செயின்ட் லுாயிஸ்: 'கிளட்ச்' செஸ் இரண்டாவது நாள் முடிவிலும் ஆனந்த் பின்தங்கினார்.
அமெரிக்காவில் முன்னாள் உலக சாம்பியன்கள் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 55, ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் 62, மோதும் 'கிளச்' செஸ் தொடர் நடக்கிறது. கடைசியாக 1995ல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இருவரும் மோதினர். தற்போது 30 ஆண்டுக்குப் பின் மீண்டும் இருவரும் மோதுகின்றனர். மொத்தம் 3 நாளில் 12 போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளில் நடந்த 4 போட்டி முடிவில் ஆனந்த் 1.5-2.5 என பின்தங்கினார்.
இரண்டாவது நாளில் 4 போட்டி (5 முதல் 8) நடந்தன. ஒவ்வொரு வெற்றிக்கும் 2 புள்ளி தரப்பட்டன. 5 வது போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 32வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். 7வது போட்டியில் மீண்டும் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஆனந்த், 18 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். 6, 8வது போட்டி 'டிரா' ஆகின.
இரண்டாவது நாள் முடிவில் ஆனந்த் 3.5-8.5 என்ற கணக்கில் பின்தங்கினார். மீதமுள்ள 4 போட்டியில் 3ல் வென்றால் மட்டும் ஆனந்த் சாதிக்கலாம்.