ADDED : அக் 10, 2025 10:32 PM

காலிறுதியில் அமெரிக்கா
ரன்காகுவா: சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 24வது சீசன் நடக்கிறது. 'ரவுண்டு-16' போட்டியில் அமெரிக்க அணி 3-0 என, இத்தாலியை வீழ்த்தியது. தென் கொரிய அணி 1-2 என, மொராக்கோவிடம் தோல்வியடைந்தது.
அரையிறுதியில் சபலென்கா
உஹான்: சீனாவில் நடக்கும் டபிள்யு.டி.ஏ., உஹான் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா 6-3, 6-3 என, கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவை வீழ்த்தினார். அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-0 என ஜெர்மனியின் லாராவை வென்றார்.
இங்கிலாந்து கலக்கல்
லண்டன்: இங்கிலாந்தில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, வேல்ஸ் அணிகள் மோதின. மார்கன் ரோஜர்ஸ், ஒல்லீ வாட்கின்ஸ், புகாயோ சகா தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க இங்கிலாந்து அணி 3-0 என கணக்கில் வெற்றி பெற்றது.
ஆஸி., வீரர் ஏமாற்றம்
ஷாங்காய்: சீனாவில் நடக்கும் ஏ.டி.பி., ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவிடம் தோல்வியடைந்தார்.
எக்ஸ்டிராஸ்
* மலேசியாவில், சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் இன்று பிரிட்டன் அணியை சந்திக்கிறது.
* உலக பாட்மின்டன் கூட்டமைப்பின் 'அத்லெட்ஸ் கமிஷன்' உறுப்பினராக இந்திய வீராங்கனை சிந்து 3வது முறையாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே 2017 முதல் 2025 வரை உறுப்பினராக இருந்த இவர், வரும் 2029 வரை இப்பதவியில் இருப்பார்.
* மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடும் கேரளா அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். கேப்டனாக முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
* ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பையில் விளையாடும் மும்பை அணிக்கு கேப்டனாக ஷர்துல் தாகூர் நியமனம். இந்த அணியில் சர்பராஸ் கான், அஜின்கியா ரகானே, ஷிவம் துபே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
* ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், அணிகளுக்கு இடையிலான ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. இதில் சிறப்பாக செயல்படும் அணிகள், அடுத்த ஆண்டு லண்டனில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறும்.