
ஹம்பர்க்: 'பிரீஸ்டைல்' செஸ் தொடர் காலிறுதியில் குகேஷ் தோல்வியடைந்தார்.
ஜெர்மனியில் 'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் தொடர் நடக்கிறது. உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், ஐந்து முறை உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சன் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர். தகுதிச்சுற்றில் பங்கேற்ற 9 போட்டியில் 7 'டிரா', 2 தோல்வி அடைந்த குகேஷ், 3.5 புள்ளியுடன் 8வது இடம் பிடித்தார்.
இதையடுத்து காலிறுதியில், 3வது இடம் பிடித்த அமெரிக்காவின் பேபியானோ காருணாவுடன் மோதினார். இதில் இரு போட்டி நடந்தன. முதல் போட்டியில் தோற்ற குகேஷ், இரண்டாவது போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இதில் வென்றாக வேண்டிய நெருக்கடியில் விளையாடிய குகேஷ், 18 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
காருணா 2.0-0 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். அடுத்து 5 முதல் 8 வரையிலான இடங்களுக்கான போட்டியில் குகேஷ் பங்கேற்க உள்ளார்.