/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'பிரீஸ்டைல்' செஸ்: குகேஷ் எதிர்ப்பு
/
'பிரீஸ்டைல்' செஸ்: குகேஷ் எதிர்ப்பு
ADDED : ஏப் 18, 2025 10:07 PM

புதுடில்லி: 'பிரீஸ்டைல்' செஸ் முறைக்கு உலக சாம்பியன் குகேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 'பிரீஸ்டைல்' செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடத்தப்படுகிறது. வழக்கமான செஸ் முறையில் இருந்து மாறுபட்டது. ஜெர்மனியில் நடந்த முதல் தொடரில், உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், 8வது இடம் பிடித்தார். சமீபத்தில் பாரிஸ் தொடரில் இவர், 11 வது இடம் பெற்றார். மற்ற இந்திய வீரர்கள் அர்ஜுன் 5, பிரக்ஞானந்தா 9, விதித் 11வது இடம் பிடித்தனர். முதல் இரு தொடரில் ஜெர்மனியின் வின்சென்ட், நார்வேயின் கார்ல்சன் சாம்பியன் ஆகினர்.
இதுகுறித்து குகேஷ் கூறியது:
'பிரீஸ்டைல்' செஸ் போட்டியில் அனைவரும் தங்களது திட்டங்களை செயல்படுத்தி பார்க்கலாம். என்னை பொறுத்தவரை எந்தெந்த காய்கள் எந்த இடத்தில் உள்ளன, போட்டி எப்படி செல்லும் என்பதை கணிப்பது சவாலானதாக உள்ளது. ஏனெனில் பல்வேறு திட்டமிடல்கள் வழக்கமான செஸ் போல இருந்தாலும், இது வித்தியாசமானது.
இது சரிதான் என நினைத்து நகர்த்துவது, கடைசியில் தவறாகி போய்விடுகிறது. 'பிரீஸ்டைல்' செஸ் முறையில் நமது உள்ளுணர்வு சொல்வது எப்போதும் சரியாக இருக்காது. இதற்காக நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். வழக்கமான போட்டிகளை விட, இதில் நிறைய கணக்கிட வேண்டும். எது சரி, எது தவறு என யாருக்கும் சரியான முறை தெரியாது.
வின்சென்ட், கார்ல்சனுக்கு எந்தெந்த காய் எங்கு சென்றால் போட்டி எப்படி முடியும் என்ற உள்ளுணர்வு இருக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்டம் புதுசு
செஸ் போட்டிகளில் வழக்கமாக பாரம்பரிய முறைப்படி பல துவக்க நகர்த்தல் உண்டு. இதற்கேற்ப வீரர், வீராங்கனைகள் முன்னதாக திட்டமிட்டு விளையாடுவர்.
'பிரீஸ்டைல்' அல்லது 'செஸ் 960' முறையில் சிப்பாய்கள் வழக்கமான இடத்தில் இருக்கும். ராஜா, ராணி, யானை உள்ளிட்டவை வழக்கத்துக்கு மாறாக வெவ்வேறு இடங்களில் இருக்கும்.
இதனால் போட்டியின் துவக்கத்தில் இருந்தே வீரர், வீராங்கனைகள் புதிதாக திட்டமிட்டு, போட்டி சூழலுக்கு ஏற்ப தந்திரமாக செயல்பட வேண்டும்.

