/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பிரக்ஞானந்தா சாம்பியன் * கிராண்ட் செஸ் தொடரில் அபாரம்
/
பிரக்ஞானந்தா சாம்பியன் * கிராண்ட் செஸ் தொடரில் அபாரம்
பிரக்ஞானந்தா சாம்பியன் * கிராண்ட் செஸ் தொடரில் அபாரம்
பிரக்ஞானந்தா சாம்பியன் * கிராண்ட் செஸ் தொடரில் அபாரம்
ADDED : மே 17, 2025 10:46 PM

புக்காரெஸ்ட்: கிராண்ட் செஸ் தொடரில் முதன் முறையாக சாம்பியன் ஆனார் பிரக்ஞானந்தா.
கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசனின், இரண்டாவது தொடர் ருமேனியாவில் ('சூப்பர்பெட் கிளாசிக்') நடந்தது. எட்டு சுற்று முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, 5.0 புள்ளியுடன் முதலிடத்தில் இருந்தார். 9வது, கடைசி சுற்றில் வென்றால் சாம்பியன் ஆகலாம் என்ற நிலையில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியனை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43வது நகர்த்தலில் 'டிரா' செய்ய, 5.5 புள்ளி பெற்றார்.
மற்ற போட்டிகளில் பிரான்சின் மேக்சிம் வாசியர், போலந்தின் ஜான் டுடாவை வென்றார். பிரான்சின் அலிரேசா, ருமேனியாவின் பாக்டனை வீழ்த்தினார். 9 சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, வாசியர், அலிரேசா தலா 5.5 புள்ளியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய 'பிளே ஆப்' சுற்று நடந்தது.
ஒவ்வொரு வீரரும் மற்ற வீரருடன் தலா ஒரு முறை மோதினர். பிரக்ஞானந்தா-அலிரேசா மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது. வாசியர், அலிரேசா மோதிய போட்டியும் 'டிரா' ஆனது.
முதல் கோப்பை
அடுத்து பிரக்ஞானந்தா, வாசியர் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து 1.5 புள்ளியுடன் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து, இத்தொடரில் முதன் முறையாக சாம்பியன் ஆனார். அலிரேசா (1.0), வாசியர் (0.5) அடுத்த இரு இடம் பிடித்தனர்.
2025ல் பிரக்ஞானந்தா வென்ற இரண்டாவது கோப்பை இது. முன்னதாக 'டாடா ஸ்டீல்' தொடரில் சாம்பியன் ஆகி இருந்தார்.
ரூ. 66.48 லட்சம் பரிசு
கிராண்ட் செஸ் தொடரில் கோப்பை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ. 66.48 லட்சம் பரிசு கிடைத்தது. 9 வது இடம் பெற்ற உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், ரூ. 14.65 லட்சம் பெற்றார்.