ADDED : ஆக 17, 2026 10:59 PM

செயின்ட் லுாயிஸ்: கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் திவ்யா, வைஷாலி 'டிரா' செய்தனர்.
அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் பெண்களுக்கான கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. மொத்த பரிசுத் தொகை ரூ. 2.39 கோடி. உலக கோப்பை செஸ் சாம்பியன், இந்தியாவின் திவ்யா, கோனேரு ஹம்பி, வைஷாலி உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். நேற்று ஆறாவது சுற்று நடந்தன.
திவ்யா, கிரீசின் ஸ்டாவ்ரலாவை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 54 நகர்த்தலில் போட்டியை 'டிரா' செய்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் வைஷாலி, உக்ரைனின் அனா முஜிசக்கை சந்தித்தார்.
கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் வைஷாலி. இப்போட்டி 41 நகர்த்தலில் 'டிரா' ஆனது. ஹம்பி, அமெரிக்காவின் அலைஸ் லீயிடம் தோல்வியடைந்தார்.
ஆறு சுற்று முடிவில் சீனாவின் டான் ஜோங்யி (4.5), அலைஸ் (4.0), திவ்யா (3.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். ஹம்பி (2.0) 8, வைஷாலி (2.0) 9வது இடத்தில் நீடிக்கின்றனர்.
