உலக ஹாக்கி: இந்தியா ஏமாற்றம் * இங்கிலாந்திடம் மீண்டும் வீழ்ந்தது
உலக ஹாக்கி: இந்தியா ஏமாற்றம் * இங்கிலாந்திடம் மீண்டும் வீழ்ந்தது
ADDED : ஆக 17, 2026 11:12 PM

ஆம்ஸ்டல்வீன்: உலக கோப்பை ஹாக்கி அரங்கில் இங்கிலாந்துக்கு எதிரான சோகம் தொடர்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் 16வது உலக கோப்பை ஹாக்கி தொடர் (ஆண்கள், பெண்கள் பிரிவு) நடக்கிறது. 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி, முதல் போட்டியில் 3-1 என வேல்சை வீழ்த்தியது.
உலகத் தரவரிசையில் 8வது இடத்திலுள்ள இந்திய அணி, நேற்று தனது இரண்டாவது போட்டியில், உலகின் 'நம்பர்-3', வலிமையான இங்கிலாந்தை எதிர்கொண்டது.
போட்டியின் 13வது நிமிடத்தில் இங்கிலாந்தின் நிக்கோலஸ், முதல் கோல் அடித்தார். அடுத்த 3வது நிமிடம் (16) இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை துல்லியமாக அடித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், கோலாக மாற்றினார்.
24 வது நிமிடத்தில் இந்திய வீரர் தில்பிரீத் சிங் ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். முதல் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
மீண்டும் ஏமாற்றம்
இதன் பின் இங்கிலாந்து வீரர்கள் சுதாரித்துக் கொண்டனர். 38 வது நிமிடம் ஸ்டூவர்ட், 42வது நிமிடம் ஹென்றி தலா ஒரு கோல் அடிக்க இந்திய அணி 2-3 என பின்தங்கியது. தொடர்ந்து 54வது நிமிடம் நிக்கோலஸ் மற்றொரு கோல் அடித்தார்.
முடிவில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. கடந்த 1994க்குப் பின் உலக கோப்பை அரங்கில் இங்கிலாந்தை வென்றதில்லை என்ற நிலை தொடர்கிறது.
வாய்ப்பு எப்படி
இந்திய அணி 'டி' பிரிவில் 2 போட்டியில் 3 புள்ளியுடன், பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. வேல்ஸ் (1), பாகிஸ்தான் (1) 3, 4வது இடத்தில் உள்ளன. முதலிடத்தில் இங்கிலாந்து (6) உள்ளது. இந்திய அணி கடைசி போட்டியில் நாளை பாகிஸ்தானை சந்திக்கிறது. இதில் வென்றால் மட்டுமே அரையிறுதி செல்வதற்கான, இரண்டாவது சுற்றுக்கு முன்னேற முடியும்.
வேல்ஸ் 'டிரா'
'டி' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் வேல்ஸ் அணி, பாகிஸ்தானை சந்தித்தது. 48 நிமிடம் வரை 2-1 என்ற முன்னிலையில் இருந்தது வேல்ஸ். பின் 2-3 என பின்தங்கியது. வேல்ஸ் வீரர் பர்லாங் இரண்டாவது கோல் அடிக்க, இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
ஸ்பெயின் அபாரம்
பெண்களுக்கான உலக கோப்பை, 'சி' பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயின், அயர்லாந்து மோதின. 54 நிமிடம் வரை ஸ்கோர் 2-2 என சமனில் இருந்தது. 55வது நிமிடத்தில் கினே ஒரு கோல் அடிக்க, ஸ்பெயின் அணி 3-2 என 'திரில்' வெற்றி பெற்றது.
* 'ஏ' பிரிவில் நடந்த போட்டியில் ஜப்பான் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தியது.
* 'பி' பிரிவில் அமெரிக்க அணி, 3-2 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தை சாய்த்தது.
