ADDED : ஆக 18, 2026 11:14 PM

செயின்ட் லுாயிஸ்: கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் தொடரின் ஏழாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி 'டிரா' செய்தார்.
அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் பெண்களுக்கான கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. மொத்த பரிசுத் தொகை ரூ. 2.39 கோடி. உலக கோப்பை செஸ் சாம்பியன், இந்தியாவின் திவ்யா, கோனேரு ஹம்பி, வைஷாலி உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். நேற்று ஏழாவது சுற்று நடந்தன.
இந்தியாவின் வைஷாலி, அமெரிக்காவின் காரிசா இப் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, போட்டியின் 45 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். ஹம்பி, சுவிட்சர்லாந்தின் அலெக்சாண்ட்ரா மோதிய மற்றொரு போட்டி, 35 நகர்த்தலில் 'டிரா' ஆனது.
திவ்யா, சீனாவின் டான் ஜோங் இயை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய திவ்யா, 41 நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
ஏழு சுற்று முடிவில் சீனாவின் டான் ஜோங்யி (5.5), கஜகஸ்தானின் பிபிசாரா (4.5), அமெரிக்காவின் அலைஸ் (4.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். திவ்யா (3.5) ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஹம்பி (2.5) 8, வைஷாலி (2.5) 9வது இடத்தில் தொடர்கின்றனர்.
