ADDED : செப் 24, 2026 11:06 PM

சமர்கண்ட்: உஸ்பெகிஸ்தானில், செஸ் ஒலிம்பியாட் 46வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவு 8 வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, அஜர்பெய்ஜானை சந்தித்தது. இந்திய அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜ்ராத்தி, அர்ஜுன் களமிறங்கினர். பிரக்ஞானந்தா-ஷாக்ரியார், அர்ஜுன்-சுலேமான்லி, விதித் குஜ்ராத்தி-ராப் மோதிய மூன்று போட்டிகள் 'டிரா' ஆகின. மற்றொரு போட்டியில் உலக சாம்பியன் குகேஷ், முராத்லி மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், முன்னிலையில் இருந்தார். கடைசியில் இப்போட்டி 56 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் 2.0-2.0 என்ற கணக்கில் போட்டி 'டிரா' ஆனது.
சவிதா ஸ்ரீ அபாரம்
பெண்கள் பிரிவில் இந்தியா, 8வது சுற்றில் கஜகஸ்தானை சந்தித்தது. 'நடப்பு சாம்பியன்' இந்திய அணியில் ஹம்பி, வைஷாலி, திவ்யா, சவிதா ஸ்ரீ பங்கேற்றனர். உலக கோப்பை சாம்பியன் திவ்யா, ஹம்பி தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர். வைஷாலி, நுர்மானிடம் தோற்க, இந்தியா 1.0-2.0 என பின்தங்கியது. கடைசி போட்டியில் சவிதா ஸ்ரீ, 62 வது நகர்த்தலில் எல்நாசை சாய்த்தார். முடிவில் போட்டி 2.0-2.0 என 'டிரா' ஆனது.
