ADDED : ஆக 06, 2026 11:05 PM

செயின்ட் லுாயிஸ்: செயின்ட் லுாயிஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
அமெரிக்காவின் செயின்ட் லுாயிஸ் செஸ் கிளப் சார்பில் சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' தொடர் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா உட்பட மொத்தம் 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் நடந்த 'ரேபிட்' பிரிவில், பிரக்ஞானந்தா, 12 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார்.
அடுத்து 'பிளிட்ஸ்' பிரிவில் 18 சுற்று நடக்கின்றன. நேற்று 9 சுற்று நடந்தன. முதல் சுற்றில் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் மோதினர். இதில் கருப்பு காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 66 நகர்த்தலில் வெற்றி பெற்றார். அடுத்து, 5, 7வது சுற்றில் ஜோர்டன் பாரீஸ்ட் (நெதர்லாந்து), பெரசை (அமெரிக்கா) வீழ்த்தினார்.
அமெரிக்காவின் அவாண்டர் லியாங், சோ வெஸ்லே, பேபியானோ, ஆரோனியன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, கேண்டிடேட்ஸ் தொடரின் சாம்பியன், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவிற்கு எதிரான போட்டிகளை பிரக்ஞானந்தா 'டிரா' செய்தார்.
9 சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, 3 வெற்றி, 6 'டிரா'வுடன், 6.0 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். ஆரோனியன் (5.5), சிந்தரோவ் (5.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக பிரக்ஞானந்தா (18.0), சிந்தரோவ் (16.5), வெஸ்லே (15.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.
