ADDED : ஆக 06, 2026 11:06 PM

ஈகுனே: யூத் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆஷிஷ், தரணிதரன் (ஈட்டி எறிதல்) பைனலுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவில் யூத் (20 வயதுக்கு உட்பட்டோருக்கான) உலக தடகள சாம்பியன்ஷிப் 21 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 147 அணிகளில் இருந்து 1800 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 23 வீரர், 13 வீராங்கனைகள் என 36 பேர் களமிறங்கியுள்ளனர்.
பெண்களுக்கான வட்டு எறிதல் தகுதிச்சுற்று நடந்தது. குறைந்தது 55 மீ., துாரம் எறிய வேண்டும் என்ற நிலையில் இந்தியாவின் அமனத் கம்போஜ், 52.58 மீ., துாரம் எறிந்து, 'ஏ' பிரிவில் 6வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 12வது இடம் பெற, தரவரிசை அடிப்படையில் ('டாப்-12') வட்டு எறிதல் பைனலுக்கு அமனத் தகுதி பெற்றார்.
ஆண்களுக்கான 800 மீ., ஓட்டம் தகுதிச்சுற்று நடந்தது. இந்திய வீரர் மொகாலி வெங்கட்ராம், ஒரு நிமிடம், 52.81 வினாடி நேரத்தில் வந்து, 3வது இடம் பிடிக்க, அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு வீரர் உவின் ஆனந்த் (1:52.37) 7வது இடம் பெற, அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
முதல் தமிழர்
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் ஆஷிஸ் யாதவ், தமிழகத்தின் தரணிதரன் (தஞ்சை) பங்கேற்றனர். இதில் ஆஷிஷ் (69.87 மீ.,), தரணிதரன் (68.07 மீ.,) என இருவரும் 2, 12வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர். யூத் உலக தடகள சாம்பியன்ஷிப், ஈட்டி எறிதலில் பைனலுக்கு முன்னேறிய, முதல் தமிழர் என பெருமை பெற்றார் தரணிதரன்.
கலப்பு அணிகளுக்கான 4*400 மீ., ஓட்டத்தில் இந்திய அணி 3:22.85 வினாடி நேரத்தில் வந்து, தகுதிச்சுற்றில் 4வது இடம் பிடித்து, பைனல் வாய்ப்பை இழந்தது.
