ADDED : ஆக 12, 2026 10:57 PM

செயின்ட் லுாயிஸ்: சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
'கிராண்ட் செஸ் டூர்' 11வது சீசன், 5 தொடர்களாக நடக்கிறது. இதன் 5வது, கடைசி தொடர், அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் 'சின்க்யுபீல்டு' கோப்பை தொடராக நேற்று துவங்கியது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
நேற்று இரண்டாவது சுற்று நடந்தது. பிரக்ஞானந்தா, கேண்டிடேட்ஸ் தொடரின் சாம்பியன், உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க உள்ள உக்ரைனின் சிந்தரோவை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார் பிரக்ஞானந்தா. போட்டியின் 67 நகர்த்தல் வரை இருவரும் சமநிலையில் இருந்தனர். 82 வது நகர்த்தலில் சிந்தரோவ் செய்த தவறை பயன்படுத்திக் கொண்டார் பிரக்ஞானந்தா. முடிவில் 95 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்ற போட்டிகளில் மேக்சிம் வாசியர், லெவான் ஆரோனியன், சோ வெஸ்லே வெற்றி பெற்றனர். இரண்டு சுற்று முடிவில் அமெரிக்காவின் பேபியானோ, வெஸ்லே, பிரான்சின் வாசியர், அமெரிக்காவின் ஆரோனியன், பிரக்ஞானந்தா என 5 பேர், தலா 1.5 புள்ளியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
