ADDED : ஆக 20, 2026 10:58 PM

செயின்ட் லுாயிஸ்: சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, இரண்டாவது இடம் பிடித்தார்.
'கிராண்ட் செஸ் டூர்' 11வது சீசன், 5 தொடர்களாக நடக்கிறது. இதன் 5வது, கடைசி தொடர், அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் 'சின்க்யுபீல்டு' கோப்பை தொடராக நடந்தது.
நேற்று 9வது சுற்று நடந்தது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 37 நகர்த்தலில் 'டிரா' செய்தார். 9 சுற்று முடிவில் அமெரிக்காவின் வெஸ்லே (5.5), பிரக்ஞானந்தா (5.0) முதலிடம் பெற்றனர்.
'டை பிரேக்கர்' முடிவு
வெற்றியாளரை முடிவு செய்ய 'டை பிரேக்கர்' நடந்தது. இதன் இரு போட்டிகளும் 'டிரா' ஆக, இருவரும் 1.0-1.0 என சம புள்ளி பெற்றனர். பின், 'ஆர்மகெடான்' முறைக்கு சென்றது. இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடும் வீரர் 'டிரா' செய்தாலே, வென்றதாக அறிவிக்கப்படுவார். பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். இப்போட்டி 86 நகர்த்தலில் 'டிரா' ஆனது.
ஸ்கோர் 1.5-1.5 என இருந்த போதும், விதிப்படி, வெஸ்லே (ரூ. 83.78 லட்சம் பரிசு) வென்றதாக அறிவிக்கப்பட்டார். இத்தொடரில் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் ஆனார். பிரக்ஞானந்தாவுக்கு (ரூ. 74.21 லட்சம்) இரண்டாவது இடம் கிடைத்தது. உஸ்பெகிஸ்தானின் சிந்தரோவ் (ரூ. 40.69 லட்சம்) 3வது இடம் பிடித்தார்.
பைனலுக்கு தகுதி
'கிராண்ட் செஸ் டூர்' 11வது சீசனில் 5 தொடர்கள் நடந்தன. இதில் சிறப்பாக செயல்பட்ட 'டாப்-4' வீரர்கள், அமெரிக்காவில் நாளை துவங்கும் பைனலுக்கு தகுதி பெற்றனர். முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா (35.5 புள்ளி), 4வது இடம் பெற்ற ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் (28.5) அரையிறுதியில் மோத உள்ளார். 2, 3 வது இடம் பெற்ற அமெரிக்க வீரர்கள் வெஸ்லே (34.5), பேபியானோ (29.5), மற்றொரு அரையிறுதியில் மோதுகின்றனர்.
