/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: அர்ஜுன் சாதனை * 2800 புள்ளியை கடந்தார்
/
செஸ்: அர்ஜுன் சாதனை * 2800 புள்ளியை கடந்தார்
ADDED : அக் 25, 2024 10:59 PM

புதுடில்லி: சர்வதேச செஸ் 'லைவ் ரேட்டிங்' தர வரிசையில் 2800 புள்ளியை கடந்த இரண்டாவது இந்தியர் என சாதனை படைத்தார் அர்ஜுன்.
செர்பியாவில் ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதில் அல்கலாய்டு அணிக்காக இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, சூப்பர் செஸ் அணிக்காக குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதன் ஐந்தாவது சுற்றில் அல்கலாய்டு வீரர் அர்ஜுன், துருக்கி ஏர்லைன்சின் டிமிட்ரி ஆன்ரெய்கினை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 48 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து சர்வதேச செஸ், 'லைவ் ரேட்டிங்' தரவரிசையில் 5.1 புள்ளி கூடுதலாக பெற்ற அர்ஜுன், ஒட்டுமொத்தமாக 2802.1 புள்ளி எடுத்துள்ளார். 'லைவ் ரேட்டிங்' வரிசையில் விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்து, 2800 புள்ளியை எட்டிய இரண்டாவது இந்தியர் ஆனார் அர்ஜுன். சர்வதேச அரங்கில் இம்மைல்கல்லை எட்டிய 16 வது நட்சத்திரம் ஆனார். இதற்கான அறிவிப்பு நவ. 1ல் வெளியாகும்.
உலக செஸ் தரவரிசையில் நார்வேயின் கார்ல்சன் (2831), அமெரிக்காவின் காருணா (2805.2), அர்ஜுன் (2802.1) 'டாப்-3' ஆக உள்ளனர். இந்தியாவின் குகேஷ் 5 (2788.5), ஆனந்த் 10 (2750), விதித் சந்தோஷ் 16 (2737.3), பிரக்ஞானந்தா 19வது (2734.9) இடத்தில் உள்ளனர்.