ADDED : ஆக 26, 2025 11:05 PM

மும்பை: சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் ('பிடே') சார்பில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2023ல் அஜர்பெய்ஜானில் நடந்த தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 2வது இடம் பெற்றார்.
இதன் 11 வது சீசன், இந்தியாவின் கோவாவில், வரும் அக். 31 முதல் நவ. 27 வரை நடக்க உள்ளது. மொத்த பரிசுத் தொகை ரூ. 17.5 கோடி.
ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, நடப்பு உலக கோப்பை சாம்பியன், நார்வேயின் கார்ல்சன், அமெரிக்காவின் பேபியானோ காருவானா உட்பட மொத்தம் 206 பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் உட்பட 21 பேர் பங்கேற்க உள்ளனர். ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, 'ஜாம்பவான்' ஆனந்த் இதில் இடம் பெற்றுள்ளார். 'கிளாசிக்கல்' முறையிலான போட்டிகளில் தற்போது ஆனந்த் பங்கேற்பது இல்லை என்பதால், கோவாவில் களமிறங்குவது சந்தேகமாக உள்ளது.
போட்டி எப்படி
தரவரிசையில் 'டாப்-50' பட்டியலில் உள்ளவர்களுக்கு முதல் சுற்றில் 'பை' வழங்கப்படும். நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்பர். ஒவ்வொரு சுற்றும் இரு போட்டி கொண்ட 'நாக் அவுட்' முறையில் நடக்கும்.
தொடர் முடிவில் 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதி போட்டியான 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க வாய்ப்பு பெறுவர்.
23 ஆண்டுக்குப் பின்...
இந்தியாவில் கடந்த 2002ல் முதன் முதலில் ஐதராபாத்தில் உலக கோப்பை செஸ் நடந்தது. இதில் ஆனந்த் கோப்பை வென்றார். தற்போது 23 ஆண்டுக்குப் பின், இரண்டாவது முறையாக இந்தியாவில் நடக்க உள்ளது.