/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அழகான 'உலக' அனுபவம் * குகேஷ் ஆனந்தம்
/
அழகான 'உலக' அனுபவம் * குகேஷ் ஆனந்தம்
ADDED : டிச 13, 2024 11:27 PM

சிங்கப்பூர்: ''உலக கோப்பை வெல்ல வேண்டும் என்ற கனவு நனவானதில் மகிழ்ச்சி,'' என குகேஷ் தெரிவித்தார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடந்தது. இந்தியாவின் குகேஷ் 18, சீனாவின் டிங் லிரென் 32, விளையாடினர். 13 சுற்று முடிவில் இருவரும் தலா 6.5 புள்ளி பெற்று, சம நிலையில் இருந்தனர்.
கடைசி, 14வது சுற்றில் இருவரும் சமபலத்தில் மோதினர். ஒரு கட்டத்தில் லிரென் செய்த தவறை சரியாக பயன்படுத்திய குகேஷ், வெற்றி பெற்றார். 7.5- புள்ளியுடன் பெற்று, புதிய உலக சாம்பியன் ஆனார். 18 வயதான தமிழகத்தின் குகேஷ், உலக செஸ் சாம்பியன் ஆன, இளம் வீரர் என சாதனை படைத்தார்.
நேற்று 'பிடே' தலைவர் ஆர்காடி வோர்கோவிச், குகேஷிற்கு மாலை அணிவித்து, தங்கப்பதக்கம், கோப்பை வழங்கினார்.
அப்போது குகேஷ் 18, கூறியது:
போதிய துாக்கமின்மையால் எனது கண்கள் எரிகின்றன. 'உலக' கோப்பை வைத்திருக்கும் இந்த தருணம், எனது வாழ்க்கையில் மற்ற அனைத்தையும் விட 'ஸ்பெஷலானது'. சாம்பியன் ஆக வேண்டும் என்ற எனது கனவுப் பயணத்தில் பல்வேறு ஏற்ற, இறக்கங்கள் இருந்தன. அதிகமான சவால்கள் இருந்தன. இவை எதுவும், என்னை மாற்றி விடவில்லை. மாறாக என்னுடன் இருந்தவர்களால், அவை அனைத்தும் அழகானவையாக மாறி விட்டன.
என்னைப் பொறுத்தவரையில் எந்த ஒரு விஷயத்திற்கும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், கடவுள் தான் சரியான வழி காட்டுவார். தற்போது உலக சாம்பியன் ஆனது மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏந்த வேண்டும்
நேற்று காலை உலக சாம்பியனுக்கான கோப்பையை பார்த்து வியந்த குகேஷ், அதை தொட்டுப் பார்க்க மறுத்துவிட்டார். அப்போது அவர் கூறுகையில்,'' வெற்றி விழாவில் கோப்பையை கையில் ஏந்த வேண்டும். அதுவரை காத்திருக்கிறேன்,'' என்றார்.
எல்லாமே '18'
சிங்கப்பூரில் 18 வது உலக செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் அசத்திய குகேஷ், தனது 18 வயதில் கோப்பை வென்று, உலக சாம்பியன் ஆன இளம் வீரர் ஆனார். தவிர, செஸ் வரலாற்றில், 18 வது உலக சாம்பியனாக இணைந்தார்.
இதுகுறித்து குகேஷ் வெளியிட்ட செய்தியில்,'18வது தொடரில் 18' என தெரிவித்துள்ளார்.
வேண்டுமேன்றே தோற்றாரா லிரென்
குகேஷ்-லிரென் மோதிய 14வது சுற்று 'டிரா' ஆக அதிக வாய்ப்பு இருந்தது. இந்நிலையில் லிரென் தனது யானையை தவறாக நகர்த்த, குகேஷ் வெற்றி எளிதானது.
இதுகுறித்து முன்னாள் உலக சாம்பியன், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் கூறுகையில்,'' லிரென் விளையாடியது சிறுபிள்ளைத் தனமாக இருந்தது,'' என்றார்.
ரஷ்ய செஸ் கூட்டமைப்பு தலைவர் ஆன்ரெய் பிளாடோவ் கூறுகையில்,'' கடைசி சுற்றின் முடிவு செஸ் ரசிகர்கள், வல்லுனர்களுக்கு திகைப்பை ஏற்படுத்தியது. சீன வீரர் லிரெனின் நடவடிக்கைகள் சந்தேகமாக உள்ளது, பல்வேறு கேள்வி எழுப்புகிறது. வேண்டுமென்றே தோற்றது போல உள்ளது. இதுகுறித்து 'பிடே' தனியாக விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.
ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சனும் இதுபோல தெரிவித்து இருந்தார்.
'பிடே' தலைவர் ஆர்காடி வோர்கோவிச் கூறுகையில்,'' விளையாட்டு என்றாலே தவறுகள் நடக்க வேண்டும். கால்பந்தில் யாரும் தவறு செய்யவில்லை என்றால், கோல் அடிக்க முடியாது. ஒவ்வொரு விளையாட்டு நட்சத்திரங்களும் தவறு செய்வர். இதை சரியாக கண்டறிந்து, எதிரணியினர் எப்படி நயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதில் வெற்றி உள்ளது,'' என்றார்.
ஆனந்த் 'அட்வைஸ்'
இந்திய செஸ் ஜாம்பவான் ஆனந்த் கூறுகையில்,'' குகேஷ் வரலாறு படைத்துள்ளார். வெற்றியுடன் விமர்சனங்கள் வரத் தான் செய்யும். இதைக் கண்டு கொள்ள வேண்டாம். குகேஷின் சாதனைகள் நமக்குத் தெரியும். செஸ் ஒலிம்பியாட்டில் இரு தங்கம், கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் என பலமுறை திறமை நிரூபித்துள்ளார்,'' என்றார்.
ரூ. 5 கோடி பரிசு
குகேஷிற்கு, 'பிடே' ரூ. 11.45 கோடி பரிசு வழங்கியது. தற்போது, தமிழக அரசு ரூ. 5 கோடி பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில்,'' செஸ் உலகின் இளம் சாம்பியன் என மகத்தான சாதனை படைத்த குகேஷை கவுரவிக்கும் வகையில், ரூ. 5 கோடி பரிசு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்காலத்தில் பல வெற்றி பெற வாழ்த்துகிறேன்,' என தெரிவித்துள்ளார்.
யாருக்கு சொந்தம்
சென்னையில் பிறந்தவர் தொம்மராஜு குகேஷ். இவரது பூர்விகம் ஆந்திரா. இம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட செய்தியில்,' எங்களது சொந்த தெலுங்கு பையன், இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷிற்கு வாழ்த்துகள். 18 வயதில் உலகின் இளம் சாம்பியன் ஆன உங்கள் வெற்றியை தேசம் கொண்டாடுகிறது,' என தெரிவித்துள்ளார். இவருக்கு கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.