
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் எட்டாவது சுற்றில் 'டிரா' செய்தார் குகேஷ்.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. கேண்டிடேட்ஸ் தொடரில் வென்ற உலகின் 'நம்பர்---5' இந்தியாவின் குகேஷ் 18, நடப்பு உலக சாம்பியன், உலகின் 'நம்பர்---15' சீனாவின் டிங் லிரென் 32, விளையாடுகின்றனர்.
மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். முதல் ஏழு சுற்று முடிவில், போட்டி இருவரும் தலா 3.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
நேற்று எட்டாவது சுற்று நடந்தது. இந்தியாவின் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். 26 வது நகர்த்தலில் குகேஷ் முந்தினார். அடுத்த 3 நகர்த்தலில் தவறு செய்ய, டிங் லிரென் மீண்டார். 41 வது நகர்த்தலில் லிரென் 'டிரா' செய்ய முயன்றார். இருப்பினும் வெற்றிக்காக போராடினார் குகேஷ்.
முடிவில் 51வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. எட்டு சுற்று முடிவில் குகேஷ் 4.0, டிங் லிரென் 4.0 புள்ளியுடன் சமமாக உள்ளனர். இன்று குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாட உள்ளார்.