UPDATED : ஜூலை 30, 2026 10:52 PM
ADDED : ஜூலை 30, 2026 10:47 PM

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு ஈட்டி எறிதல் பைனலுக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா முன்னேறினார்.
ஸ்காட்லாந்தில் காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ், யாஷ்வீர் சிங் உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர். அதிகபட்சம் 84 மீ., எறிந்தால் நேரடியாக பைனலுக்குள் நுழையலாம். ஆனால், வெப்பநிலை 18 டிகிரி செல்சியசாக இருந்தது, சீரான எதிர்காற்று வீசியதால், எந்த ஒரு வீரராலும் 84 மீ., என்ற இலக்கை எட்ட முடியவில்லை. முடிவில் 'டாப்-12' இடம் பிடித்தவர்கள் பைனலுக்கு தகுதி பெற்றனர்.
ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தனது 2வது வாய்ப்பில் அதிகபட்சமாக 79.61 மீ., எறிந்து 5வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான ரோகித் யாதவ் (78.37 மீ.,), யாஷ்வீர் சிங் (78.36 மீ.,) முறையே 9, 10வது இடத்தை கைப்பற்றினர். இலங்கை வீரர் ருமேஷ் தரங்கா அதிகபட்சமாக 82.84 மீ., எறிந்து முதலிடத்தை தட்டிச் சென்றார். அடுத்த மூன்று இடங்களை கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (81.29 மீ.,), தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் (80.64), இங்கிலாந்தின் பென் ஈஸ்ட் (80.38) கைப்பற்றினர். பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) தங்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (78.63 மீ.,) 7வது இடம் பிடித்தார்.
தமிழக வீரர்கள் அசத்தல்
ஆண்களுக்கான 'டிரிபிள்ஜம்ப்' தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில், தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபு களமிறங்கினர். இதில் அதிகபட்சமாக 16.41 மீ., தாண்டிய பிரவீன் சித்ரவேல் 2வது இடம் பிடித்தார். செல்வ பிரபு (16.26 மீ.,) 3வது இடத்தை தட்டிச் சென்றார். இவர்கள், நாளை நடக்கவுள்ள பைனலில் அசத்தினால், காமன்வெல்த் விளையாட்டில் தங்களது முதல் பதக்கத்தை கைப்பற்றலாம்.
* ஆண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் சந்தோஷ் குமார் தமிழரசன், யாஷஸ் பாலக் ஷா உள்ளிட்ட 23 பேர் மூன்று பிரிவுகளாக பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் வீரர்களுடன், 3வது இடம் பிடிக்கும் 'டாப்-2' வீரர்கள் பைனலுக்கு தகுதி பெறுவர். தங்களது பிரிவில் 3வது இடம் பிடித்த யாஷஸ் (49.65 வினாடி), தமிழகத்தின் சந்தோஷ் குமார் (49.51) பைனலுக்கான இடத்தை உறுதி செய்தனர்.
மன்பிரீத், பாருல் ஏமாற்றம்
பெண்களுக்கான குண்டு எறிதல் பைனலில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் பங்கேற்றார். தனது 5வது வாய்ப்பில் அதிகபட்சமாக 17.49 மீ., எறிந்த மன்பிரீத் கவுர், 4வது இடம் பிடித்து ஏமாற்றினார். இவரை விட, 0.38 மீ., கூடுதலாக எறிந்த ஜமைக்காவின் லாய்ட்ரிசியா (17.87 மீ.,) வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். கனடாவின் சாரா மிட்டன் (19.88), நைஜீரியாவின் ஜெசிகா (17.87) முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.
* பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் பாருல் சவுத்ரி பங்கேற்றார். பந்தய துாரத்தை 9 நிமிடம், 22.07 வினாடியில் கடந்த பாருல், 5வது இடம் பிடித்து ஏமாற்றினார். கென்யாவின் பெய்த் செரோடிச் (9 நிமிடம், 01.76 வினாடி) தங்கம் வென்றார்.
* ஆண்களுக்கான 'பாரா' வட்டு எறிதல் (எப்42-44/எப்61-64) பைனலில் இந்தியாவின் சாகர் தயாத் (51.79 மீ.,), தேவேந்தர் குமார் (48.20) முறையே 6, 7வது இடம் பிடித்தனர்.
* ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் அரையிறுதியில், இலக்கை 46.33 வினாடியில் கடந்த இந்தியாவின் விஷால், ஒட்டுமொத்தமாக 14வது இடம் பிடித்தார்.
ஆர்யன் 7வது இடம்
ஆண்கள் நீச்சல் போட்டிக்கான 1500 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு பைனலில் இந்தியாவின் ஆர்யன் நெஹ்ரா (15 நிமிடம், 36.25 வினாடி) 7வது இடம் பிடித்தார். ஏற்கனவே இவர், 800 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் 8வது இடம் பிடித்திருந்தார்.
மார்டினா 5வது இடம்
பெண்களுக்கான பளுதுாக்குதல் +86 கிலோ பிரிவில் இந்தியாவின் மார்டினா தேவி பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 105, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 140 என, ஒட்டுமொத்தமாக 245 கிலோ பளுதுாக்கிய மார்டினா, 5வது இடம் பிடித்தார்.
