ADDED : ஜூலை 22, 2026 11:04 PM

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு திருவிழா இன்று துவங்குகிறது. இந்திய நட்சத்திரங்கள் சிறப்பாக செயல்பட்டு பதக்க வேட்டை நடத்த காத்திருக்கின்றனர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23வது காமன்வெல்த் விளையாட்டு இன்று துவங்குகிறது. 74 நாடுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இம்முறை தடகளம், நீச்சல், டிராக் சைக்கிளிங், பளுதுாக்குதல், கூடைப்பந்து (3x3), லான் பவுல்ஸ், நெட்பால், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, குத்துச்சண்டை என 10 போட்டிகள் மட்டும் நடத்தப்பட உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான 'பாரா' விளையாட்டில் 6 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
ஐந்து முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஜமைக்காவின் ஷெரிக்கா ஜான்சன், இங்கிலாந்தின் தடகள வீராங்கனை டினா ஆஷர்-ஸ்மித், ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற ஆடம் பியாட்டி (நீச்சல்) உள்ளிட்ட உலகின் முன்னணி நட்சத்திரங்கள் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.
இந்தியா சார்பில் 77 வீரர், 48 வீராங்கனைகள் என 125 பேர் கொண்ட படை களமிறங்குகிறது. தடகளத்தில் அதிகபட்சமாக 22 வீரர்கள், 10 வீராங்கனைகள் என 32 பேர் பங்கேற்கின்றனர்.
ஈட்டி எறிதலில் 'தங்கமகன்' நீரஜ் சோப்ரா, தடகளத்தில் குரிந்தர்விர் சிங் (100 மீ.,), அனிமேஷ் குஜுர் (200மீ.,), குல்வீர் சிங் (5,000 மீ.,), விஷால் (400 மீ.,), ராஷ்தீப் (400 மீ.,), பிரவீன் சித்ரவேல் ('டிரிபிள் ஜம்ப்'), தேஜஸ்வின் சங்கர் (உயரம் தாண்டுதல், டெகாத்லான்), குத்துச்சண்டையில் லவ்லினா, பளுதுாக்குதலில் மீராபாய் சானு இந்தியாவுக்கு பதக்கம் வென்று தர காத்திருக்கின்றனர்.
துவக்க விழா
துவக்கவிழா இன்று இரவு 'தி ஓ.வி.ஓ. ஹைட்ரோ' மைதானத்தில் நடக்கவுள்ளது. தவிர, முதன் முறையாக உள்ளரங்கு மைதானத்தில் விழா நடக்கிறது. இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா பங்கேற்க உள்ளனர். எடின்பரோவை சேர்ந்த பாடகர், பாடலாசிரியர் கே.டி.டன்ஸ்டால் துவக்க விழாவில் முக்கிய பங்கு வகிக்க உள்ளார்.
இவருடன் ஸ்காட்லாந்து கலைஞர்கள் கால்லும் பியாட்டி, நினா நெஸ்பிட், நாதன் ஈவன்ஸ் பங்கேற்கின்றனர். நாடுகளுக்கான அணி வகுப்பின் போது, எலக்ட்ரானிக் போல்க் இரட்டையர்களான வால்டோஸ், இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது, 'பிரிட்' விருது பெற்ற கலைஞர் டாம் வாக்கரும் பங்கேற்க உள்ளார்.
இதற்கான வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை, ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றிய மீராபாய் சானு (பளுதுாக்குதல்), லவ்லினா (குத்துச்சண்டை) ஏந்தி வரவுள்ளனர்.
215 தங்கம்
கிளாஸ்கோவில் 11 நாள் நடக்கும் போட்டியில், 10 விளையாட்டில், மொத்தம் 215 பிரிவுகளில் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளன.
சாதிப்பரா பாரா நட்சத்திரங்கள்
கடந்த 2002ல் மான்செஸ்டர், காமன்வெல்த் விளையாட்டில், 'பாரா' போட்டிகள் அறிமுகமாகின. இதில் இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்தன. கடந்த 2022ல் பர்மிங்காமில் நடந்த போட்டியில் இந்தியாவின் சுதிர் ('பவர்லிப்டிங்'), பவினா படேல் (டேபிள் டென்னிஸ்) தங்கம் வென்றனர். இம்முறை 28 பேர் கொண்ட இந்திய நட்சத்திரங்கள், பாரா விளையாட்டில் களமிறங்குகின்றனர்.
12 ஆண்டுக்குப் பின்
ஸ்காட்லாந்தில் கடந்த 2014ல் காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. இதில் 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் என இந்தியா 64 பதக்கம் கைப்பற்றியது. தற்போது 12 ஆண்டுக்குப் பின் மீண்டும் இங்கு காமன்வெல்த் திருவிழா நடக்கிறது.
கபான்... டோகோ
கபான், டோகோ நாடுகள் கடந்த 2022ல் காமன்வெல்த் அமைப்பில் இணைந்தது. தற்போது முதன் முறையாக காமன்வெல்த் விளையாட்டில் களமிறங்குகின்றன. மேற்கு ஆப்ரிக்காவின் கானா அருகில் உள்ளது டோகோ. இதன் சார்பில் 10 பேர் களமிறங்குகின்றனர்.
மத்திய ஆப்ரிக்காவின் கேமருன், காங்கோ நாடுகளின் அருகில் உள்ளது கபான். 80 சதவீத பகுதிகள் வெப்பமண்டல மழைக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. 885 கி.மீ., நீள கடற்கரை கொண்டது. இதன் சார்பில் 2 பேர் பங்கேற்கின்றனர்.
'லக்கேஜ்' வரல
குத்துச்சண்டையில் பங்கேற்கும் 22 பேர் கொண்ட இந்திய அணியினர், வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்டில் பயிற்சியில் ஈடுபட்டனர். தற்போது அனைவரும் கிளாஸ்கோ சென்றுள்ளனர். ஆனால் சாக்சி, லம்போரியா, பர்வீன், தலைமை பயிற்சியாளர் குட்டப்பா உள்ளிட்டோரின் பயிற்சி பொருட்கள், துவக்கவிழாவில் பங்கேற்பதற்கான உடைகள் இன்னும் வந்து சேரவில்லை. பெல்பாஸ்டில் இருந்து கிளாஸ்கோவுக்கு சிறிய ரக விமானம் தான் இயக்கப்படுகிறது. இதனால் தங்களுக்கான பொருட்கள் வரும் வரை இந்திய நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்.
நான்காவது முறை
காமன்வெல்த் விளையாட்டு 4வது முறையாக ஸ்காட்லாந்தில் நடக்கவுள்ளது. இதற்கு முன், 2 முறை (1970, 1986) எடின்பர்க், ஒரு முறை (2014) கிளாஸ்கோவில் நடந்தது.
* காமன்வெல்த் விளையாட்டை அதிக முறை நடத்திய நாடுகளுக்கான பட்டியலில் 2வது இடத்தை கனடாவுடன் (1930, 1954, 1978, 1994) பகிர்ந்து கொண்டது ஸ்காட்லாந்து. இரு அணிகளும் தலா 4 முறை இப்போட்டியை நடத்தின. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (5 முறை, 1938, 1962, 1982, 2006, 2018) உள்ளது.
