அசோக் நான்காவது இடம் * காமன்வெல்த் 'பவர் லிப்டிங்' போட்டியில்
அசோக் நான்காவது இடம் * காமன்வெல்த் 'பவர் லிப்டிங்' போட்டியில்
ADDED : ஜூலை 24, 2026 11:21 PM

கிளாஸ்கோ: காமன்வெல்த் பாரா பவர் லிப்டிங் போட்டியில் இந்தியாவின் அசோக் குமார், நான்காவது இடம் பெற்று, வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. மாற்றுத் திறனாளிளுக்கான 'பவர் லிப்டிங்' போட்டி நடந்தது. இந்தியா சார்பில் அசோக் குமார் மாலிக், பரம்ஜீத் குமார் களமிறங்கினர்.
முதல் வாய்ப்பில் 195, அடுத்து 200 கிலோ துாக்கினார் அசோக். மூன்றாவது வாய்ப்பில் 205 கிலோ துாக்க முடியாமல் திரும்பிய இவர், 143.8 புள்ளி பெற்று, நான்காவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்க வாய்ப்பு நழுவியது.
* பெண்களுக்கான போட்டியில் இந்தியா சார்பில் ஜஸ்பிரீத் கவுர், சுமன் தேவி பங்கேற்றனர். இதில் 'பி' பிரிவில் பங்கேற்ற ஜஸ்பிரீத் கவுர், அதிகபட்சம் 100 கிலோ எடை துாக்கி, 96.4 புள்ளி பெற்று, முதலிடம் பிடித்தார்.
* அடுத்து 'ஏ' பிரிவில் போட்டி நடந்தன. இதில் சுமன் தேவி அதிகபட்சம் 100 கிலோ (88.4 புள்ளி) மட்டும் துாக்கி, 6வது இடம் பெற்றார். ஒட்டு மொத்தமாக ஜஸ்பிரீத் கவுர் 6, சுமன் தேவி 7 வது இடம் பெற்றனர். 123 கிலோ எடை துாக்கிய நைஜீரியாவின் எஸ்தர் (119.0 புள்ளி), காமன்வெல்த் சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார்.
இந்தியா அபாரம்
பெண்கள் இரட்டையர் லான் பவுல்ஸ் போட்டியில் இந்தியா 'பி' பிரிவில் உள்ளது. நேற்று தனது இரண்டாவது போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்காவை சந்தித்தது. இந்தியா சார்பில் ரூபா ராணி, பிங்கி களமிறங்கினர். முதல் செட்டை இந்தியா 6-4 என வசப்படுத்தியது. இரண்டாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட 7-5 என கைப்பற்றியது.
முடிவில் இந்திய ஜோடி 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. பங்கேற்ற 2 போட்டியிலும் வென்ற இந்தியா 9 புள்ளியுடன், பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்று தனது மூன்றாவது போட்டியில் இந்தியா, டோங்காவை சந்திக்க உள்ளது.
முதல் தங்கம்
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டின் முதல் தங்கத்தை, பவர் லிப்டிங் போட்டியில் அசத்திய இங்கிலாந்து வீரர் மார்க் ஸ்வான் (153.9 புள்ளி) தட்டிச் சென்றார்.
* நைஜீரியாவின் ரோலண்ட் (153.9), மலேசியாவின் கஸ்டின் (153.5), வெள்ளி, வெண்கலம் பெற்றனர்.
தபான், யோகேஷ்வர் நம்பிக்கை
ஜிம்னாஸ்டிக் ஆண்கள் அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் தபான், யோகேஷ்வர் சிங், தபேஷ்வர்நாத், ஸ்வதிஷ் அடங்கிய அணி பங்கேற்றது. இப்பிரிவில் இதுவரை இந்தியா எவ்வித பதக்கமும் வென்றதில்லை. இம்முறை 'புளோர் எக்சர்சைஸ்' பிரிவில் 32.250, பொம்மல் ஹார்ஷ் பிரிவில் 31.250, ரிங் பிரிவில் 36.050 புள்ளி எடுத்தது. அடுத்து பார் பிரிவில் 35.450 புள்ளி எடுத்தது. ஒட்டுமொத்தமாக 35.800 புள்ளியுடன் 'சப்-டிவிசன் 2' பிரிவில் முதலிடம் பெற்றது.
* தனிநபர் 'ஆல் ரவுண்டு' பிரிவில் இந்திய வீரர்கள் தபான் (71.700 புள்ளி), யோகேஷ்வர் (71.400) 3, 4வது இடங்களில் உள்ளனர். 24 பேர் கொண்ட பைனலுக்கு முன்னேற, அதிக வாய்ப்புள்ளது.
துலிகா நீக்கம்
இந்தியாவின் முன்னணி ஜூடோ வீராங்கனை துலிகா மான் 27. டில்லியை சேர்ந்த இவர் 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் +78 கிலோ பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். தவிர 2022, 2024 உலக சாம்பியன்ஷிப், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்றார். இம்முறை காமன்வெல்த் செல்ல இருந்தார்.
ஆனால், போட்டி இல்லாத நாட்களில் நடத்தப்படும் ஊக்கமருந்து சோதனைகளை தவிர்க்கும் வகையில், தனது இருப்பிடம் குறித்த விவரங்களை, துலிகா மூன்று முறை தெரிவிக்காமல் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம், இவரை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தது. வேறு வழியில்லாத நிலையில் துலிகா, காமன்வெல்த் விளையாட்டில் இருந்து விலகினார்.
ஏற்கனவே ஜூடோ வீரர் அருண் குமார் இதுபோல வெளியேறினார். இதனால் வரும் 27ல் 12 பேர் கொண்ட ஜூடோ அணி, கிளாஸ்கோ செல்ல உள்ளது.
'ஸ்பெஷல்' பதக்கம்
கிளாஸ்கோ விளையாட்டில் மொத்தம் 215 தங்கம் உட்பட மொத்தம் 1168 பதக்கம் வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான 6 பாரா விளையாட்டில் 47 தங்கம் வழங்கப்பட உள்ளன.
இதனால், பார்வை குறைபாடு உள்ள நட்சத்திரங்களும் பதக்கத்தை தொட்டு உணர்ந்து மகிழும் வகையில், முதன் முறையாக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இல்லாமல், முக்கோண வடிவில் தயாராகியுள்ள இதன் மேற்பரப்பில் ஸ்காட்லாந்தின் கடந்த காலத்தை நினைவு படுத்தும் பின்னிஸ்டன் கிரேன், தேசிய சின்னமான டார்ட்டனுடன், பார்வையற்றோர் உணரும் வகையில் எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் உள்ள மூன்று அடுக்குகள், பதக்க மேடைகளை குறிக்கின்றன. பல்கேரியாவின் மிலென்கோவா இதை டிசைன் செய்துள்ளார்.
அரையிறுதியில் ஸ்ரீஹரி நடராஜ்
ஆண்களுக்கான 50 மீ., பேக் ஸ்டிரோக் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ், 25.52 வினாடி நேரத்தில் வந்து, தகுதிச்சுற்றில் 5வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 16 பேர் கொண்ட பட்டியலில், ஸ்ரீஹரி 14வது இடம் பிடிக்க, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
*பார்வை குறைபாடு உள்ள ஆண்களுக்கான 100 மீ., எஸ்.13 பிரிவு பிரீஸ்டைல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரவி வீரா (57.10 வினாடி), அலி இமாம் (1:05.32) என இருவரும் சிறப்பாக செயல்பட்டு, பைனலுக்கு முன்னேறினர்.
