வரலாறு படைத்தார் அஸ்மிதா * காமன்வெல்த் ஜூடோவில் * இந்தியாவுக்கு இரண்டு தங்கம்
வரலாறு படைத்தார் அஸ்மிதா * காமன்வெல்த் ஜூடோவில் * இந்தியாவுக்கு இரண்டு தங்கம்
ADDED : ஜூலை 31, 2026 11:15 PM

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு ஜூடோ போட்டியில் முதல் தங்கம், வென்று வரலாறு படைத்தார் இந்தியாவின் அஸ்மிதா. ஆண்கள் பிரிவில் ஹர்ஷ் சிங் தங்கம் கைப்பற்றினார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. நேற்று ஜூடோ போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 48 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஸ்மிதா தே, ஸ்காட்லாந்தின் சம்மர் ஷாவை 1-0 என வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தார்.
இதில் கனடாவின் ஹெய்தியை எதிர்கொண்டார். துவக்கத்தில் 0-1 என பின்தங்கிய அஸ்மிதா, அடுத்து ஒரு 'பெனால்டி' பெற்றார். பின் எழுச்சி பெற்ற அஸ்மிதா, 4 நிமிட முடிவில் 1-1 என சமன் செய்தார். அடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி 'கோல்டன் ஸ்கோர்' முறைக்கு போட்டி சென்றது. இதில் முதல் புள்ளி பெறுபவர் வெற்றியாளர் ஆவார்.
இம்முறை ஹெய்தியை கீழே தள்ளிய அஸ்மிதா, ஒரு புள்ளி பெற்றார். முடிவில் 2-1 என அஸ்மிதா வெற்றி பெற்றார். காமன்வெல்த் ஜூடோ வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று வரலாறு படைத்தார். இதற்கு முன் இந்தியா 5 வெள்ளி, 6 வெண்கலம் மட்டுமே வென்றிருந்தது.
ஹர்ஷ் கலக்கல்
ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஹர்ஷ் சிங், ஆஸ்திரேலியாவின் ஜோஷுவா காட்சை எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஹர்ஷ் சிங், 10-0 என வெற்றி பெற்றார். காமன்வெல்த் ஜூடோ விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என சாதனை படைத்தார்.
யாமினி 'வெள்ளி'
பெண்களுக்கான ஜூடோ, 57 கிலோ பிரிவு பைனலில் யாமினி, 'இப்பான்' (0-100) முறையில் இங்கிலாந்தின் அசெல்யாவிடம் தோல்வியடைய, வெள்ளி கிடைத்தது. நேற்று மட்டும் ஜூடோவில் இந்தியாவுக்கு 2 தங்கம், 1 வெள்ளி என 3 பதக்கம் கிடைத்தன.
தடகள வீராங்கனை
தெற்கு திரிபுராவின் பெலோனியாவை சேர்ந்தவர் அஸ்மிதா 23. துவக்கத்தில் 800 மீ., ஓட்டத்தில் பங்கேற்றார். பின் ஜூடோவுக்கு மாறினார். ஜூனியர் ஆசிய கோப்பை (2023), ஆப்ரிக்க ஓபன் (2025) போட்டிகளில் தங்கம் வென்றார். தற்போது காமன்வெல்த்தில் சாதித்துள்ளார்.
