ADDED : ஆக 01, 2026 10:57 PM

கிளாஸ்கோ: காமன்வெல்த் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் இந்தியா சார்பில் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா, யாஷ் விர் சிங், ரோகித் யாதவ் என 3 பேர் பங்கேற்றனர்.
நீரஜ் சோப்ரா 2வது வாய்ப்பில் அதிகபட்சம் 85.83 மீ., துாரம் எறிந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். நடப்பு சீசனில் இது, இவரது சிறந்த செயல்பாடாக அமைந்தது. மற்றொரு இந்திய வீரர் யாஷ் விர் சிங் கடைசி வாய்ப்பில் 85.41 மீ., துாரம் எறிய, வெண்கலப் பதக்கம் தட்டிச் சென்றார்.
76 ஆண்டுக்குப் பின்...
இலங்கை வீரர் ருமேஷ் தரங்கா பதிராகே, 89.75 மீ., துாரம் எறிந்து முதலிடம் பிடித்தார். இதையடுத்து, 76 ஆண்டுக்குப் பின் (1950ல் டங்கன் ஒயிட்), காமன்வெல்த் தடகளத்தில் தங்கம் வென்ற இலங்கை வீரர் ஆனார். பாரிஸ் ஒலிம்பிக்கில் 92.97 மீ., துாரம் எறிந்து தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், இம்முறை 77.41 மீ., எறிய, 9வது இடம் பெற்று வெளியேறினார்.
மூன்றாவது இந்தியர்
காமன்வெல்த் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் ஆனார் யாஷ் விர் சிங் (வெண்கலம்). முன்னதாக 2010ல் காஷிநாத் (வெண்கலம்), நீரஜ் சோப்ரா (2018ல் தங்கம், 2026ல் வெள்ளி) சாதித்துள்ளனர்.
