/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வினேஷ் போகத் செய்தது சரியா: மனம் திறக்கிறார் சாக் ஷி மாலிக்
/
வினேஷ் போகத் செய்தது சரியா: மனம் திறக்கிறார் சாக் ஷி மாலிக்
வினேஷ் போகத் செய்தது சரியா: மனம் திறக்கிறார் சாக் ஷி மாலிக்
வினேஷ் போகத் செய்தது சரியா: மனம் திறக்கிறார் சாக் ஷி மாலிக்
ADDED : அக் 21, 2024 11:14 PM

புதுடில்லி: ''ஆசிய விளையாட்டு தகுதிப் போட்டியில் இருந்து வினேஷ் போகத், பஜ்ரங் புனியா விதிவிலக்கு பெற்றது போராட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது,'' என சாக் ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் ஷரன் சிங் இருந்தார். இவர் மீது பாலியல் புகார் சுமத்திய வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக் ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் டில்லியில் போராட்டம் நடத்தினர். பின் பிரிஜ் பூஷன் விலக, உயர் மட்ட கமிட்டி மல்யுத்த நிர்வாகத்தை ஏற்றது.
இந்த கமிட்டி 2023ல் ஹாங்சுவில் நடந்த ஆசிய விளையாட்டுக்கான தகுதிப் போட்டியில் பங்கேற்பதில் இருந்து வினேஷ் போகத், பஜ்ரங் புனியாவுக்கு விலக்கு அளித்தது. நேரடியாக பங்கேற்கலாம் என அறிவித்தது. இதை இவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால், போட்டிக்கு முன் காயம் அடைந்த வினேஷ், விலகினார். பதக்கம் வெல்ல தவறினார் பஜ்ரங். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் (ரியோ, 2016) பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாக் ஷி மாலிக், விதிவிலக்கு கோரவில்லை. ஆசிய விளையாட்டிலும் பங்கேற்கவில்லை. பின் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
இது குறித்து 'விட்னஸ்' என்ற தனது சுயசரிதையில் சாக் ஷி மாலிக் புகார் கூறியுள்ளார். அதில்,'வினேஷ், பஜ்ரங் புனியாவுக்கு நெருக்கமான சிலர், அவர்களது மனதில் பேராசையை விதைத்தனர். உடனே ஆசிய விளையாட்டு தகுதிப் போட்டியில் பங்கேற்பதில் இருந்து விலக்கு கோரினர். இருவருக்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இவர்களது முடிவால் பிரிஜ் பூஷனுக்கு எதிரான போராட்டத்தின் 'இமேஜ்' பாதிக்கப்பட்டது. நாங்கள் சுயநலத்துடன் செயல்படுவதாக பலரும் நினைத்தனர்,' என குறிப்பிட்டுள்ளார்.
புதிய சர்ச்சை
பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024), 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், பைனலுக்கு முன்னேறினார். பைனலுக்கு முன் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பின் காங்., கட்சியில் பஜ்ரங், வினேஷ் சேர்ந்தனர். ஹரியானா சட்டசபை தேர்தலில் ஜூலானா தொகுதியில் வினேஷ் வெற்றி பெற்றார். தற்போது இவர் மீது சாக் ஷி மாலிக் புகார் கூறியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
19 வயதில்...
சுயசரிதையில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை எழுதியுள்ளார் சாக் ஷி மாலிக். அதில்,'எனது 19 வயதில் கசகஸ்தானின் அல்மாட்டியில் நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் (2012) தங்கம் வென்றேன். எனது பெற்றோரிடம் பேசுவதற்காக பிரிஜ் பூஷன் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அழைத்து சென்றனர். அவரது அலைபேசியில் இருந்து என் பெற்றோருக்கு பேச உதவினார். அந்த சமயத்தில் அவரது படுத்கையில் அமர்ந்து இருந்தேன். பெற்றோரிடம் பேசி முடித்ததும், எனக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுக்க முயன்றார். உடனே அவரை தள்ளிவிட்டு, அழுதேன். ஒரு அடி பின் சென்ற அவர், என் தோள் மீது கையை வைத்து 'உன் தந்தையை போல' என சொல்ல ஆரம்பித்தார். அவரது எண்ணத்தை புரிந்து கொண்டு அறையை விட்டு வெளியே ஓடி வந்தேன். அல்மாட்டியில் நடந்த இந்த சம்பவம் பலருக்கும் தெரியும். நான் உட்பட யாரும் அப்போது வாய் திறக்கவில்லை.
பள்ளி பருவத்தில் எனது 'டியூஷன் டீச்சர்' பல முறை பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் 'டியூஷன்' செல்லவே பயந்தேன்,'என குறிப்பிட்டுள்ளார்.