/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் ஜோகோவிச்: பாரிஸ் ஒலிம்பிக் டென்னிசில்
/
தங்கம் வென்றார் ஜோகோவிச்: பாரிஸ் ஒலிம்பிக் டென்னிசில்
தங்கம் வென்றார் ஜோகோவிச்: பாரிஸ் ஒலிம்பிக் டென்னிசில்
தங்கம் வென்றார் ஜோகோவிச்: பாரிஸ் ஒலிம்பிக் டென்னிசில்
ADDED : ஆக 05, 2024 12:27 AM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் தங்கம் வென்றார்.
பிரான்சின் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் மோதினர். ஜோராக ஆடிய ஜோகோவிச் 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, ஒலிம்பிக்கில் தனது முதல் தங்கம், 2வது பதக்கத்தை கைப்பற்றினார். இதற்கு முன் 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் ஒற்றையரில் வெண்கலம் வென்றிருந்தார். வெள்ளி வென்ற அல்காரஸ், ஒலிம்பிக்கில் தனது முதல் பதக்கத்தை கைப்பற்றினார்.
நீச்சல்: 'தங்க மகள்' லெடிக்கி
பெண்களுக்கான நீச்சல் போட்டி 800 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு பைனலில், இலக்கை 8 நிமிடம், 11.04 வினாடியில் அடைந்த அமெரிக்காவின் கேட்டி லெடிக்கி தங்கம் வென்றார். இது, பாரிஸ் ஒலிம்பிக்கில் இவரது 2வது தங்கம், 4வது பதக்கம் ஆனது. ஏற்கனவே 1500 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் தங்கம் வென்ற இவர், 400 மீ., 'பிரீஸ்டைல்' (வெண்கலம்), 4x200 மீ., 'பிரீஸ்டைல்' (வெள்ளி) பிரிவில் பதக்கம் வென்றிருந்தார்.
* ஒலிம்பிக் அரங்கில் லெடிக்கி வென்ற 14வது பதக்கம் (9 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம்) ஆனது. இதன்மூலம் ஒலிம்பிக்கில் 9 அல்லது அதற்கு மேல் தங்கம் வென்ற 6வது நட்சத்திரமானார். அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் (23 தங்கம், நீச்சல்), மார்க் ஸ்பிட்ஸ் (9, நீச்சல்), கார்ல் லீவிஸ் (9, தடகளம்), சோவியத் யூனியனின் லாரிசா (9, ஜிம்னாஸ்டிக்ஸ்), பின்லாந்தின் பாவோ நுர்மி (9, தடகளம்) இம்மைல்கல்லை எட்டினர்.
* லெடிக்கி, தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தை ஆக. 3ல் (2008 பீஜிங், 800 மீ., 'பிரீஸ்டைல்') கைப்பற்றினார். பாரிசில் அசத்திய இவர், தனது 9வது தங்கத்தை (800 மீ., 'பிரீஸ்டைல்) ஆக. 3ல் வென்றார்.
ஜமைக்காவுக்கு பின்னடைவு
ஒலிம்பிக் தடகளத்தில் ஜமைக்கா வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்துவர். பீஜிங் (2008) முதல் டோக்கியோ (2021) ஒலிம்பிக் வரை பெண்களுக்கான 100, 200 மீ., ஓட்டத்தில் ஜமைக்காவுக்கு 15 பதக்கம் (மொத்தம் 24) கிடைத்தன. டோக்கியோ ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தில் மூன்று பதக்கங்களையும் கைப்பற்றிய ஜமைக்காவின் எலைன் தாம்சன்-ஹேரா, ஷெல்லி-ஆன் பிரேசர்-பிரைஸ், ஷெரிகா ஜாக்சன், பாரிஸ் ஒலிம்பிக்கில் காயத்தால் 100, 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இது ஜமைக்காவுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.