UPDATED : அக் 16, 2026 10:52 PM
ADDED : அக் 16, 2026 09:17 PM

* ''உலக கோப்பையில் முதல் முறையாக 5வது இடம் பிடித்தோம். ஆசிய விளையாட்டில் 44 ஆண்டுகளுக்கு பின் தங்கம் வென்றோம். இதுபோல லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (2028) தங்கம் வென்று புதிய வரலாறு படைக்க விரும்புகிறோம்,'' என, இந்திய ஹாக்கி கோல்கீப்பர் சவிதா புனியா தெரிவித்துள்ளார்.
* எகிப்தில், உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் ஜக் ஷேர் சிங் கங்குரா 6-15, 15-13, 3-15 என, இந்தோனேஷியாவின் ராதித்யா பாயு வார்தானாவிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார். இது, உலக ஜூனியர் பாட்மின்டனில் இந்தியாவுக்கு கிடைத்த 7 வெண்கலம். இதுவரை ஒரு தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என, 13 பதக்கம் வென்றுள்ளது இந்தியா.
* கபடி சாம்பியன்ஸ் லீக் 2வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று டில்லியில் நடக்கவுள்ளது. இதில் 10 அணிகள் சார்பில், ரூ. 5 கோடிக்கு வீரர்களை ஒப்பந்தம் செய்ய உள்ளன. நவீன் கோயத், சுனில் மாலிக் உள்ளிட்டோர் அதிக விலைக்கு ஒப்பந்தமாகலாம்.
* உ.பி.,யின் ஜான்சியில் சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் நடக்கிறது. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழக அணி 1-3 என, பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது. 'டி' பிரிவில் ஹரியானா அணி 2-0 என, மணிப்பூரை வென்றது. 'சி' பிரிவில் உ.பி., அணி 3-2 என, கர்நாடகாவை தோற்கடித்தது. 'பி' பிரிவில் மத்திய பிரதேச அணி 3-2 என, மஹாராஷ்டிராவை வீழ்த்தியது.
* அடுத்த ஆண்டு நடக்கவுள்ள புரோ லீக் ஹாக்கி தொடரில், இந்திய ஆண்கள் அணி, ஜெர்மனி (பிப். 13, 16), அர்ஜென்டினா (பிப். 15, 18), பிரிட்டன் (பிப். 23, 26), ஸ்பெயின் (பிப். 25, 28) அணிகளை சந்திக்கிறது. இந்திய பெண்கள் அணி, பிரிட்டன் (பிப். 23, 26), ஸ்பெயின் (பிப். 25, 28) அணிகளுடன் விளையாடுகிறது.
* டில்லியில் நடந்த தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் பிரிவு (16 வயது) பைனலில், தமிழகத்தின் சன்மிதா ஹரினி, ஹரியானாவின் குஷி ஜோடி 6-3, 6-3 என, குஜராத்தின் பூர்வி, பஞ்சாப்பின் ரஞ்சனா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
