தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்திய மண்ணில் 2036ல் ஒலிம்பிக்: பிரதமர் மோடி உறுதி

இந்திய மண்ணில் 2036ல் ஒலிம்பிக்: பிரதமர் மோடி உறுதி

இந்திய மண்ணில் 2036ல் ஒலிம்பிக்: பிரதமர் மோடி உறுதி


UPDATED : அக் 16, 2026 07:53 AM

ADDED : அக் 16, 2026 12:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 07:53 AM ADDED : அக் 16, 2026 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ‘‘ஆசிய விளையாட்டில் கிடைத்த வெற்றி, உங்களுடையது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் வெற்றி. வரும் 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது உறுதி,’’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜப்பானின் அய்ச்சி–நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டு நடந்தது. இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் உட்பட 85 பதக்கங்களுடன் 4வது இடம் பிடித்தது. இதில் அசத்திய தமிழகத்தின் வித்யா ராம்ராஜ், துப்பாக்கிசுடுதல் வீராங்கனை நீரு தண்டா உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள், நேற்று பிரதமர் மோடியை சந்தித்தனர்.

டில்லி, மேஜர் தயான்சந்த் மைதானத்தில் நடந்த விழாவில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அப்போது ஹாக்கியில் தங்கம் வென்ற சலிமா தலைமையிலான இந்திய பெண்கள், தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்ற கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் உள்ளிட்ட இந்திய ஆண்கள் அணியினர், ஹாக்கி ஸ்டிக், வீரர், வீராங்கனைகள் கையெழுத்திட்ட ஆரஞ்சு நிற ஜெர்சியை, மோடிக்கு பரிசாக வழங்கினார்.

ரிகர்வ் பிரிவு வில்வித்தையில் 2 தங்கம் வென்ற சாதனை படைத்த, 17 வயது வீராங்கனை கும்கும், வில் மாதிரியை மோடியிடம் வழங்கினார்.

ஷ்ரேயஸ் ஐயர் (ஆண்கள்), ஹர்மன்பிரீத் கவுர் (பெண்கள்) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினரும், நீல நிற ஜெர்சி வழங்கினர்.

பின் பிரதமர் மோடி பேசியது: ஆசிய விளையாட்டில் வென்ற பதக்கங்கள், வெறும் எண்களை மட்டுமல்ல, புதிய இந்தியாவின் வலிமையை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது. இதற்கு முன் வெற்றி பெற முடியாத போட்டிகளில் எல்லாம், இம்முறை இந்தியா பதக்கம் வென்று திரும்பியுள்ளது. சாப்ட் டென்னிஸ், பாய்மர படகு என பல்வேறு விளையாட்டுகளில், முதன் முறையாக பதக்கம் வென்று, நமது நட்சத்திரங்கள் வரலாறு படைத்தனர்.

புதிய சாதனை



ஹாக்கியில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி, 44 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதே போல வில்வித்தையில் 5 தங்கம் கிடைத்தன. துப்பாக்கிசுடுதல், குத்துச்சண்டை, மல்யுத்தம் என பல விளையாட்டிலும் புதிய சாதனை படைத்தனர். பளுதுாக்குதலில் 28 ஆண்டுக்குப் பின் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்தது.

பெரிய வெற்றி



இந்தியாவுக்கு நமது வீராங்கனைகள் மட்டும், 11 தங்கம் உட்பட 38 பதக்கங்களை கொண்டு வந்துள்ளனர். இவர்களை ‘ஸ்பெஷலாக’ பாராட்டுகிறேன்.

இந்திய மூவர்ணக்கொடியை உயரத்தில் பறக்கச் செய்வது மிகப்பெரிய வெற்றியாகும். ஆசிய விளையாட்டில் இதைச் சாதித்த நீங்கள், 140 கோடி இந்தியர்களை பெருமைப்படச் செய்துள்ளீர்கள். தற்போது கிடைத்துள்ள இந்த வெற்றி உங்களுடைய மட்டுல்ல, நமது தேசத்தின் கோடிக்கணக்கான மக்களுடைய வெற்றி.

ஒலிம்பிக் உறுதி



வரும் 2036ல் ஒலிம்பிக் போட்டி நடத்த விண்ணப்பித்து உள்ளோம். எப்படியும் நடத்துவோம் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கனவு நிறைவேறுமா


பிரதமர் மோடி கூறுகையில்,‘‘ கனவுகள் ஒரே நாளில் நிறைவேறி விடுவதில்லை. அதற்கு பல ஆண்டு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவைப்படும். கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா நிதானமாக, பொறுமையாக செயல்பட்டு, கடுமையாக போராடி, சிறப்பான விளையாட்டு சூழலை உருவாக்கியுள்ளது. முன்பெல்லாம், பெரிய போட்டிகளில் இந்தியா பெரும்பாலும் ஒருசில பதக்கங்களை மட்டுமே வென்று திரும்பியது. எத்தனையே விளையாட்டுகள் குறித்து இந்தியா அறிந்திருக்கக் கூட இல்லை. இதை முற்றிலும் மாற்றியுள்ளோம். இதனால் உலக விளையாட்டு அரங்கில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது,’’ என்றார்.



பயிற்சிக்கு உதவி


பிரதமர் மோடி கூறுகையில்,‘‘ இந்தியா விளையாட்டில் வெளிப்படைத் தன்மை நிலவுகிறது. எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் சரி, அன்னிய மண்ணில் பயிற்சி பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அரசு ஏற்பாடு செய்கிறது. தவிர, தேவையான நிதி உதவியும் வழங்குகிறது,’’ என்றார்.
பள்ளி செல்லுங்கள்
பிரதமர் மோடி கூறுகையில்,‘‘ அடுத்த தலைமுறை விளையாட்டு நட்சத்திரங்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுடன் உரையாடுங்கள். நீங்கள் சொல்லும் ஒரு வார்த்தை, அவர்கள் விளையாட்டில் முன்னேறுவதற்கான துணிச்சலை தரும்,’’ என்றார்.
காயத்துடன் சென்றது எப்படி
தடகளத்தில் ஜோதி, பிரவீன் சித்ரவேல் உள்ளிட்டோருக்கு இருந்த காயங்கள், போட்டியின் போது தெரியவந்தன. இதனால், இந்தியா இம்முறை தடகளத்தில் ஒரு தங்கம் மட்டும் வென்றது. இதுகுறித்து, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த ஆசிய விளையாட்டு செயல்பாடு குறித்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்,‘ இன்னும் எவ்வளவு காலம், மீராபாய் சானு மட்டும் பதக்கம் வென்று தருவார், அவரைப் போல 10 வீரர், வீராங்கனைகளை உருவாக்க வேண்டும், திறமையானவர்கள கண்டறிய வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us