/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா * பெடரேஷன் ஈட்டி எறிதலில் கலக்கல்
/
தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா * பெடரேஷன் ஈட்டி எறிதலில் கலக்கல்
தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா * பெடரேஷன் ஈட்டி எறிதலில் கலக்கல்
தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா * பெடரேஷன் ஈட்டி எறிதலில் கலக்கல்
ADDED : மே 15, 2024 10:59 PM

புவனேஸ்வர்: பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தினார் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா.
தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்தது. நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி பைனல் நடந்தது. ஹரியானா சார்பில் ஒலிம்பிக், உலக சாம்பியன் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 82.00 மீ., துாரம் எறிந்த நீரஜ் சோப்ரா, அடுத்த வாய்ப்பில் பவுல் செய்தார்.
மூன்றாவது வாய்ப்பில் 81.29 மீ., துாரம் மட்டும் எறிந்தார். நான்காவது வாய்ப்பில் அதிகபட்சமாக 82.27 மீ., துாரம் எறிந்து முதலிடம் பிடித்தார். கடைசி இரு வாய்ப்புகளை பயன்படுத்தவில்லை. இருப்பினும் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
முதல் மூன்று சுற்றில் முதல்வனாக இருந்த கர்நாடக வீரர் மானு (82.06 மீ.,), கடைசியில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். மகாராஷ்டிராவின் உத்தம் பாட்டீல் (78.39 மீ.,) வெண்கலம் கைப்பற்றினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க காத்திருக்கும் கிஷோர் ஜெனா (ஒடிசா), 2, 5வது வாய்ப்பில் 75.49, 73.79 மீ., துாரம் மட்டும் எறிந்து ஏமாற்றினார்.
கிரிதராணி வெள்ளி
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் கிரிதராணி, 11.67 வினாடி நேரத்தில் வர, இரண்டாவது இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். நித்யாவுக்கு (12.01) 5வது இடம் கிடைத்தது.
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா, 53.52 வினாடி நேரத்தில் வந்து, மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் தான் கிடைத்தது. கர்நாடகாவின் பூவம்மா (53.32 வினாடி), ஹரியானாவின் சம்மி (53.46 வினாடி) முதல் இரு இடம் பிடித்து தங்கம், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர்.
பெண்களுக்கான 'ஹெப்டத்லான்' போட்டியில் தமிழகத்தின் தீபிகா, 4817 புள்ளி எடுத்து வெண்கலம் கைப்பற்றினார். 100 மீ., ஓட்டத்தில் தமிழக வீரர் கிட்சன் (10.80 வினாடி) 7வது இடம் பிடித்தார்.
சபாஷ் பிரவீன் சித்ரவேல்
ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல், 16.79 மீ., துாரம் தாண்டி, முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு தமிழக வீரர் முகமது சலாகுதீன் (16.59 மீ.,), வெண்கலம் வென்றார். கேரளாவின் எல்தோஷ் பால் (16.59 மீ.,) வெள்ளி தட்டிச் சென்றார்.

